ஆரோவில்லில் 150 வீரர்கள் பங்கேற்றனர் குதிரையேற்ற போட்டியில் 10 வயது சிறுவன் முதலிடம்

 

வானூர், மார்ச் 18: ஆரோவில்லில் நடந்த குதிரையேற்ற போட்டியில் 10 வயது சிறுவன் முதலிடம் பிடித்தான். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. வானூர் தாலுகா ஆரோவில்லில் குதிரையேற்ற பயிற்சி பள்ளி சார்பில், 25ம் ஆண்டு தேசிய குதிரையேற்ற போட்டிகள் கடந்த 7ம் தேதி ரெட் எர்த் பகுதியில் துவங்கி நடந்து வந்தது. சென்னை, பெங்களூரூ, மும்பை, ஊட்டி உட்பட பல்வேறு நகரங்களை சேர்ந்த 100 குதிரைகள், 150 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றனர். டிரஸ்சேஜ், தடை தாண்டுதல், டிராட் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வந்தது.

இறுதி நாளான நேற்று முன்தினம் காலை 7.00 மணி, மாலை 4.00 மணிக்கும் டிரஸ்சேஜ் எனப்படும் குதிரை மற்றும் வீரர்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு, பிரிஸ்டைல் ரைடர், ரிலே ஜம்பிங், போர் பார் ஜம்பிங் போட்டிகள் நடந்தது. அனைத்து வயதினரும் பங்கேற்ற ‘போர் பார் ஜம்பிங்’ போட்டியில், 6 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில், தடைகளை தாண்டி, பெங்களூரு ரைடர்ஸ் பார்ன் அணியின் சமத் என்ற 10 வயது சிறுவன் முதலிடத்தையும், ரிலே ஜம்பிங் போட்டியில் 2 வீரர்கள் பங்கேற்ற கோவை ஸ்டேபிள்ஸ் அணி வீரர்கள் வசந்தரா, பிரதிக் ஆகியோரும், ேஷா ஜம்பிங் எனப்படும் தடை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் அகத்தியா முதலிடத்தையும் பிடித்தனர்.இறுதியில் சிறுவர் பிரிவை சேர்ந்த வீரர்கள், ஸ்பைடர் மேன், எலும்பு மனிதன் உள்ளிட்ட வேடத்தில் குதிரையில் வந்து அலங்கார நடை நிகழ்ச்சியில் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரெட் எர்த் குதிரையேற்ற பள்ளி நிர்வாகி ஜாக்குலின் மற்றும் நடுவர்கள் தங்க மெடல்களை பரிசாக வழங்கினர்.

The post ஆரோவில்லில் 150 வீரர்கள் பங்கேற்றனர் குதிரையேற்ற போட்டியில் 10 வயது சிறுவன் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: