தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மோகன் கலந்து கொண்டு பேசியதாவது: நமக்கான களம் தயாராகி விட்டது, அனைவரும் தேர்தல் களத்திற்கு தயாராகுங்கள். அதிமுகவை, அதன் தலைமையை காயப்படுத்த வேண்டாம்.
இதை நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அதிமுகவும் காப்பாற்றப்பட வேண்டும். அதன் தலைமையும் காப்பாற்றப்பட வேண்டும். இன்று இந்த இயக்கம் சிறப்பாக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இங்கு முதுகில் குத்துபவர்களும் உண்டு, நெஞ்சில் குத்துபவர்களும் உண்டு. நம்முடன் தோளில் கையை போட்டுக் கொண்டு அதிமுகவை எப்படி நசுக்க வேண்டுமென எண்ணுபவர்களும் உண்டு.
அவர்களை எல்லாம் பார்த்துத்தான் பொதுச்செயலாளர் நிதானத்தை கடைபிடித்து கொண்டிருக்கின்றார். தலைவராலும், இந்த இயக்கத்தாலும்தான் நமக்கு முகவரி கிடைத்தது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். நம்மால் அதிமுக இல்லை, அதிமுகவால்தான் நாம் என்ற உணர்வோடு செயல்பட்டு, எந்த மாறுபட்ட கருத்துக்கும் இடமளிக்காமல், காழ்ப்புணர்ச்சி அரசியல் இல்லாமல் செயலாற்றுவோம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
