கேள்வி நேரத்தின் போது காரைக்குடி எம்எல்ஏ சா.மாங்குடி (காங்கிரஸ்) பேசுகையில், ‘‘காரைக்குடி பகுதி கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட தொழிலுடன் தொடர்புடைய நகரமாக திகழ்ந்து வருகின்றது. இப்பகுதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய பல்வேறு மொழிப்படங்களும் தொடர்ச்சியாக படமாக்கப்பட்டு வருகின்றது.
காரைக்குடியைச் சுற்றிலும் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க தமிழ் பண்பாட்டு கலைநயத்துடன்கூடிய செட்டிநாட்டு நகரத்தார்களின் வீடுகள், நூறு ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரிய கோயில்கள் பல உள்ளன. திரைப்பட நகரம் அமைந்தால் ஒருநாளைக்கு சராசரியாக, சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்கள் வரை வேலைவாய்ப்பு பெறுவார்கள். எனவே சென்னை தரத்தில், காரைக்குடியில் தமிழ் திரைப்பட நகரம் அமைக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘திருவள்ளூர் மாவட்டத்தில் தற்சமயம் முதற்கட்டமாக அந்தப் பணி துவங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. காரைக்குடியில் எதிர்காலத்தில் முதல்வருடனும், துணை முதல்வருடனும் கலந்துபேசி நிதிநிலைமைக்கேற்ப பரிசீலிக்கப்படும்’’ என்றார்.
* ஊர்களின் பெயர் தமிழிலேயே தொடர உரிய நடவடிக்கை
கேள்வி நேரத்தின் போது பென்னாகரம் ஜி.கே.மணி (பாமக) பேசுகையில்,‘‘தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ் மொழியில் இருந்த பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறது. அதனை தமிழ் மொழியிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
அதற்கு பதிலளித்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘ஊர்களின் பெயர் மாற்றம் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு கிராமங்களின் பெயர்கள் தமிழிலேயே தொடர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் அளித்தார்.
