ஒரு மாதத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் முதல் கூட்டம் தவெக தனித்து போட்டி? 25ம் தேதி மாமல்லபுரம் கூட்டத்தில் அறிவிப்பு

சென்னை: தவெக தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பை நடிகர் விஜய், வருகிற 25ம் தேதி மகாபலிபுரத்தில் நடக்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் கூட்டமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இவரது செயல்பாடுகள் அவரது கட்சி அலுவலகமான பனையூரை தாண்டவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது.

அதன்பின்னர்தான் மண்டல மாநாடு நடத்தினார். பின்னர் ரோடு ஷோ நடத்தப்போவதாக அறிவித்து தொடங்கினார். ஆனால் தொடங்கிய வேகத்தில், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கட்சி நிகழ்ச்சிகள் மீண்டும் முடங்கின. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவர் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு நிதி உதவி வழங்கினார்.

இந்நிலையில்தான் அதிமுகவில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அதை தொடர்ந்து அவர் பெருந்துறையில் நடத்திய பொதுக்கூட்டம் மற்றும் சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இதற்கிடையில் அவர் நடித்த கடைசிப் படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் வெளியாகமல் நின்றது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழங்கு நடந்து வருகிறது.

ஆனாலும் ஒன்றிய அரசை நடிகர் விஜய், விமர்சிக்காமல் இருந்து வந்தார். இதனால், அவர் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நெருக்கடி கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில் வருகிற 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் போர் பாயிண்ட் ஹாலிலில் மாநில, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. அந்த கூட்டத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்து நடிகர் விஜய் முறைப்படி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் 18ம் தேதி நடிகர் விஜய் கலந்துகொள்ளும் கூட்டம் நடந்தது. அதன்பின்னர் ஒரு மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் நடிகர் விஜய் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சி தற்போது நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: