சென்னை:பதிவுத்துறை, பொதுமக்கள் தங்கள் சொத்துகளின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தை பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களை பதிவு செய்தல், புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டுதல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின் கீழ் 18 புதிய சேவைகள் உள்ளடக்கிய முதல்நிலை செயல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
ஸ்டார் 3.0 திட்டத்தின் மூலம், காகிதமில்லாமல் இணைய வழியில் ஆவணங்கள் சமர்ப்பித்திடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சொத்தினை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவரின் அடையாளமானது ஆதார் வழி பெறப்பட்ட குறுஞ்செய்தி அல்லது விரல் ரேகை வழி சரிபார்க்கப்பட்டு ஆவணதாரர்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சார்பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணையதள வழி பொதுமக்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்.
கட்டுமான நிறுவனத்திடம் இருந்து புதிய அடுக்குமாடி குடியிருப்பினை வாங்கும் போதும், புதிதாக உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் இருந்து மனைகளை மட்டும் வாங்கும் போதும், ஆன்லைன் வழி கட்டணம் செலுத்திய உடன் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே இணையவழியாக ஆவணம் பதிவுக்கு சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு இணையதள வழியாக ஆவணதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமை செயலாளர் முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
