100 நாள் வேலை திட்டம் திமுக-அதிமுக மோதல்

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது. பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் குமாரபாளையம் தங்கமணி (அதிமுக) பேசியதாவது: ஆளுநர் உரையில் 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையை பார்த்தால் இந்த திட்டமே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி: இந்த திட்டத்தை நிறுத்த ஒன்றிய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. அதற்கு நீங்களும் (அதிமுக) ஆதரவு அளிக்கிறீர்கள். 100% நிதியை 60% ஆக குறைத்துவிட்டார்கள். காந்தி பெயரை மாற்றி ‘ராம்ஜி’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். 125 நாட்கள் தருவோம் என்பது ஏமாற்று வேலை. இதற்கு முன் மாநில அரசுதான் வேலைநாட்களை நிர்ணயம் செய்தது. தற்போது வேலை நாட்களை ஒன்றிய அரசே நிர்ணயிக்கும் என அவர்கள் கூறுகிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: 100 நாளை 150 நாட்களாக உயர்த்துவோம் என திமுக வாக்குறுதி அளித்தது, ஆனால் இன்னும் நிறைவேற்றவில்லை. ஒன்றிய அரசு 125 நாட்களாக உயர்த்தியதைத்தான் நாங்கள் வரவேற்றோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் சொல்வது உண்மைதான். ஆனால், அதை செய்ய வேண்டியது ஒன்றிய அரசு. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. உங்கள் கூட்டணியில் இருக்கும் பாஜவிடம் நீங்கள் குரல் கொடுக்கலாமே?.

எடப்பாடி: வாக்குறுதி கொடுத்தது நீங்கள், நிறைவேற்ற வேண்டியது உங்கள் கடமை. எந்த அடிப்படையில் இந்த வாக்குறுதியை தந்தீர்கள்? இது ஒரு தந்திரமான அறிக்கை தானே?

அமைச்சர் ஐ.பெரியசாமி: 60-40 என நிதிப் பங்கீட்டை மாற்றியபோது நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா?

எடப்பாடி: உங்களிடம் இருக்கும் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்? ஒரு நாளாவது அவையை ஒத்திவைக்க அழுத்தம் கொடுத்தார்களா? நாங்கள் காவிரி பிரச்னைக்காக 22 நாள் நாடாளுமன்றத்தை முடக்கியவர்கள்.

அமைச்சர் ரகுபதி: பாஜ அரசை பாதுகாப்பதற்காகத்தான் அதிமுகவினர் அன்று அவையை முடக்கினார்கள்.

தங்கமணி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வந்த பின்பு, இந்த வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

* இன்று சட்டப்பேரவையில் தீர்மானம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக திமுக சொன்ன வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில், 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என வாக்குறுதி கொடுத்தீர்களா, இல்லையா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலவர் மு.க.ஸ்டாலின், ‘100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக நாளை (இன்று) சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது’ என்றார்.

Related Stories: