கேள்வி நேரத்தின் போது ம.சிந்தனை செல்வன் (விசிக) பேசுகையில், ‘‘குழந்தைகளை, மாற்றுத்திறனாளிகளை தாய்மையுணர்வோடு சமூக நலத்துறை பாதுகாத்து வருகிறது. அனாதைக் குழந்தைகளாக இருக்கிற ஆதரவற்ற குழந்தைகளை, மனநலம் பாதிக்கப்பட்ட, கைவிடப்பட்ட பிள்ளைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நீண்ட நெடிய காலமாக அனாதை இல்லங்களையும், மனநலக் காப்பகங்களையும் வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.
இத்தகைய பணிகளை பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த தொண்டு நிறுவனங்களே மேற்கொண்டு வருகின்றன. இதனால் அண்டை மாநிலமான கேரளா போன்ற மாநிலங்களில் இருப்பதைப்போல அனாதை இல்லங்கள், மனநலக் காப்பகங்களுக்கான ஒரு பாதுகாப்பு வாரியத்தை உருவாக்க தமிழக அரசு முன்வருமா?’’ என்றார்.
இதற்கு பதிலளித்து சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசுகையில், சட்டமன்ற உறுப்பினர் கூறியதுபோல, தொண்டு நிறுவனங்களால் பல்வேறு மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகங்கள், அதுபோல ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்கள் எல்லாம் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு நம்முடைய அரசு அங்கீகாரம் வழங்குவதிலிருந்து முறையாக அவர்களை கண்காணிப்பது எல்லாம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால், உறுப்பினர் சிந்தனை செல்வன், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அந்த இல்லங்களை பாதுகாப்பதற்காக தனியாக வாரியம் அமைக்க வேண்டுமென்று கூறுகிறார். இது 1993 காலங்களில் இந்த வாரியம் இருந்தது என்றும் எங்களிடம் அந்த கோரிக்கை வைத்தார். ஆகவே, நிச்சயமாக உறுப்பினருடைய அந்த கோரிக்கையை இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
