சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி அதிமுக, பாமக (அ) எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று ஒரு பிரச்னை குறித்து பேச முயற்சி செய்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, ‘‘நீங்கள் விதி 55ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள். நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்னைகள் பேசலாம்.
ஆனால் நீங்கள் கொடுத்திருப்பது கவன ஈர்ப்பு தீர்மானம். அதனால் அதற்கு உரிய பதிலை சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் வாங்கிய பின்புதான் நான் உங்களுக்கு அனுமதி தர முடியும். இதே கோரிக்கையை 15 உறுப்பினர்கள் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் கொடுக்க வேண்டும். அதனால் இப்போது விடுங்கள். நாளை (இன்று) உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம்’’ என்றார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எழுந்து நின்று பேசிக்கொண்டே இருந்தார்.
அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதனால் அதிமுகவினர் அனைவரும் எழுந்து நின்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். சபாநாயகரும் பொறுமையாக அவர்களை அமருமாறு பதில் கூறி வந்தார். நீங்கள் எழுப்பியுள்ள பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இருந்து பதில் வந்தால்தானே நான் அனுமதிக்க முடியும். பதில் வராமல் நீங்கள் இப்படி குரல் கொடுக்கக் கூடாது என கூறினார். ஆனாலும் அதிமுகவினர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். சபாநாயகரும் பதில் கூறிக்கொண்டே இருந்தார். ஆனாலும் அதிமுகவினர் பதிலுக்கு பேசிக் கொண்டே இருந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் கவனஈர்ப்பு தீர்மானம் நேரமில்லா நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இதற்கு உரிய பதில் வந்த பின்பு கண்டிப்பாக உங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும். அரசு அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் வாங்கி தான் உங்களுக்கு தர முடியும். நீங்கள் (சபாநாயகர்), அமைச்சரிடம் இருந்து பதில் வந்ததும் நாளை எடுத்துக்கொள்ளப்படும் என்று மறுக்கிறீர்கள். தயவு செய்து இதற்கு ஒத்துழைப்பு தாருங்கள். நாளை கண்டிப்பாக இது எடுத்துக் கொள்ளப்படும்.
சபாநாயகர் அப்பாவு: முதல்வர் உறுதி அளித்தபடி நாளைக்கு எடுத்துக்கொள்ளப்படும். நேரமில்லா நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் உங்களது (அதிமுக) ஆட்சியில் என்ன செய்தீர்கள் என சொல்ல முடியுமா என கேட்டார். நான் எனது அடுத்த பணியை செய்ய வேண்டும், என்னை அனுமதியுங்கள். அப்போது சபையில் அதிமுகவினர் கடுமையான கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர். இதை அடுத்து சபாநாயகர் அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றார்.
இதனால் அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு கோஷமிட்டனர். திமுக தரப்பில் அனைவரும் அமைதியாக இருந்தனர். தொடர்ந்து கோஷமிட்ட பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு வாய்ப்பு தராததால் நான் வெளிநடப்பு செய்கிறேன் என கூறினார். (இதை தொடர்ந்து எடப்பாடி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக பாமக (அ) எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
அமைச்சர் எ.வ.வேலு: குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக ஒரு பிரச்னை குறித்து அவையின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். சபாநாயகர் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கூறி பதில் பெற்ற பின்புதான் பதில் சொல்ல முடியும். இதுதான் முறை. ஆனால் அவர்கள் 9.55 மணிக்கு கொடுத்துவிட்டு இப்போதே பதில் கூறுங்கள் என்றால் எப்படி கொடுக்க முடியும்.
ஏதோ குழப்பம் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் அவர்கள் பேசிக் கொண்டு நேரம் காலத்தை வீணடித்தார்கள். கடந்த ஆட்சியில் 2019ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி நடந்த கவர்னர் உரை மீது நடந்த விவாதத்தில் அப்போதைய சபாநாயகர் தனபால் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எந்த கவன ஈர்ப்பு தீர்மானமும் ஒத்திவைப்பு தீர்மானமும் தர முடியாது என கூறினார். ஆனாலும் ஜனநாயக முறைப்படி முதல்வர் நாளை எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
சபாநாயகர் அப்பாவு: இந்த அவை யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் நடைபெறுகிறது. அனைவருக்கும் வாய்ப்பு தருகிறோம். ஜனநாயக முறைப்படி இந்த அவை நடைபெறுகிறது. கடந்த காலங்களில் கட்டுப்பாடுகள் இருந்தாலும் தற்போது முதல்வர் ஜனநாயக முறையுடன் நடத்த மாற்ற முயற்சி செய்து வருகிறார். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் ஏற்கனவே முதல்வராக இருந்தவர். திட்டமிட்டே பிரச்னையை எழுப்ப முயற்சி செய்கிறார்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
* வெளிநடப்பு ஏன்? எடப்பாடி விளக்கம்
சட்டமன்ற வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:
விவசாயிகளின் முக்கியப் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டுவர சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தமிழகத்தில் கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுமார் 40,000 விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணைகளை நடத்தி வருகின்றனர். இந்த தொழிலில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கறிக்கோழி விற்கும் நிறுவனங்கள், ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளிடம் கோழி வளர்ப்பு தொழிலைச் செய்து வருகின்றன.
கிலோ ஒன்றுக்கு ரூ.6.50 வளர்ப்புக் கூலியாக வழங்கப்படுகிறது. இவை அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கோழிப்பண்ணை செட், தேங்காய் நார், மின் கட்டணம், தண்ணீர், தொழிலாளர் சம்பளம் என அனைத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த விலை உயர்வால் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், வளர்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ.6.50லிருந்து ரூ.20 ஆக உயர்த்த வேண்டும் என்று கடந்த ஆறு மாத காலமாகப் போராடி வருகின்றனர். இதுகுறித்து அரசு இருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்துவிட்டு, பின்னர் அதை நடத்தாமல் நிராகரித்து விட்டது. இந்த அரசு திட்டமிட்டு, கோழிகளை வாங்கும் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருகிறது.
40,000 விவசாயக் குடும்பங்கள் மற்றும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னையைக்கூட இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. சென்னை, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிக்குன் குனியா காய்ச்சல் பரவி, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முக்கியப் பிரச்னையை அவையில் பேசவும் அனுமதி மறுக்கப்பட்டது.
மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசக்கூட அனுமதி மறுப்பதால், நாங்கள் வெளிநடப்பு செய்தோம். நாங்கள் யாரையும் காப்பி அடிக்கவில்லை. 2021 சட்டமன்ற தேர்தலிலேயே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, அம்மா இல்லம் திட்டம், பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகை போன்ற திட்டங்களை முதன்முதலில் அறிவித்தது அதிமுகதான். இவ்வாறு அவர் கூறினார்.
