15.5.2025 முதல் 21.5.2025 வரை
சாதகங்கள்: ராசிக்கு 12-ல் குரு இருந்தாலும், சுக ராசியைப் பார்க்கிறார். சுக ராசிக்கு உரிய சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். எனவே, வீடு வாங்கும் யோகம் உண்டு. மனை வாங்கி இருந்தால்; வீடு கட்டும் யோகமும் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுக்கும் திட்டங்கள், முயற்சிகள் வெற்றி பெறும். 11 ல் சூரியன் புதனோடு இணைந்து இருக்கின்றார். இது அற்புதமான யோகம். தனாதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதும் லாப ஸ்தானத்துக்கு உரிய சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதும், அஷ்டம சனியோடு இணைந்த ராகுவின் தாக்கத்தைக் குறைக்கும். மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தந்தை வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கௌரவம் கூடும்.
கவனம் தேவை: இரண்டில் அமர்ந்த கேது பொருளாதார ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சில குழப்பங்களைத் தரலாம். ஆனால், அவைகளை கொஞ்சம் நிதானமாகவும் புத்திப் பூர்வமாகவும் அணுகினால் அந்தப் பிரச்னைகளே உங்களுக்கு லாபமாக மாறிவிடும். பேச்சில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்படும்.
சந்திராஷ்டமம் : 20.5.2025 காலை 7.36 முதல் 22.5.2025 பகல் 12.08 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யவும்.