அண்ணாமலையார் கோயிலில் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாள் என்பதாலும், சித்திரை மாத அமாவாசை என்பதாலும் இன்று பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். அதேபோல் இரவு நேரங்களில் அனைத்து நாட்களிலும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றிரவும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடை திறக்கும் போதே தரிசன வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். படிப்படியாக பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வரிசை மாடவீதி வரை நீண்டிருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

The post அண்ணாமலையார் கோயிலில் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: