சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைச் சோதனை, சுங்கச்சோதனை ஆகியவைகளை முடித்துவிட்டு, தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். பயணி சதீஷை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக, அவருடைய குடும்பத்தினர் காரில் வந்திருந்தனர். விமான நிலையத்தின் வெளிப்பகுதியில், பிக்அப் பாயிண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அவருடைய உடைமைகளை, டிராலியில் வைத்து தள்ளிக் கொண்டு சென்றார்.கார் அருகே டிராலியை நிறுத்தி, சூட்கேஸை எடுத்து காரில் வைக்க முயன்ற சதீஷ் அதிர்ச்சி அடைந்தார்.
சூட்கேஸின் கைப்பிடியில் பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது. உடனடியாக சதீஷின் குடும்பத்தினர் மற்றும் அங்கு நின்ற சக பயணிகள் பாம்பு என்று கூச்சல் போட்டனர். உடனடியாக அங்கு நின்ற போலீசார், வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த பாம்பு கொடிய விஷம் உடைய நல்ல பாம்பு என்றும், கண்ணாடி விரியன் என்றும் பயணிகள் பலர் கூறியதால், சதீஷ் குடும்பத்தினர் மேலும் அச்சம் அடைந்தனர்.
சிலர் பாம்பை அடித்து கொன்று விடலாம் என்று முயற்சித்தனர். ஆனால் அங்கு நின்ற பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும், பாம்பை நாம் அடித்துக் கொன்றால், அது சட்டப்படி பிரச்னை ஆகிவிடும். எனவே சிறிது நேரம் பொறுத்திருங்கள், வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் வந்துவிடுவார்கள் என்று கூறினர். இந்நிலையில் தாம்பரம் தீயணைப்பு துறையினர், சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாம்பை பார்த்துவிட்டு, இது விஷம் இல்லாத, தண்ணீர் பாம்பு வகையைச் சேர்ந்தது தான், எனவே பயப்பட வேண்டியது இல்லை என்று கூறினார்கள்.
அதோடு பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சூட்கேஸ் கைப்பிடியில் சுற்றி இருந்த பாம்பை பிடித்து எடுத்து, பிளாஸ்டிக் டிரம்முக்குள் போட்டு மூடினார்கள். இந்த பாம்பு சுமார் மூன்றடி நீளம் இருக்கும் என்றும் தண்ணீர் பாம்பு வகையைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் விமான நிலையத்தின் போர்டிகோ பகுதியில் டிராலியை நிறுத்திருந்தபோது, இந்த பாம்பு அந்த வழியாக சென்றது சூட்கேசில் ஏறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பை எடுத்துச் சென்று, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘பயணியை ஏற்றி செல்வதற்கு வந்த காரில், அந்த பாம்பு இருந்திருக்கலாம். பயணி தனது உடைமைகளை காரில் ஏற்ற முயன்ற போது, காரில் பதுங்கி இருந்த பாம்பு சூட்கேஸில் சுற்றி இருக்கலாம். சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை புறப்பாடு போன்ற இடங்களில் பாம்பு இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. இங்கு முறையாக கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு, இடங்களை மிகுந்த சுத்தமாக வைத்திருக்கிறோம். எனவே சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் பாம்பு என்று பயணிகளை அச்சப்படுத்த வேண்டாம்’’ என்றனர்.
The post சென்னை விமான நிலையத்தில் பயணி சூட்கேஸ் கைப்பிடியில் சுற்றிக்கிடந்த 3 அடி நீள பாம்பு: சக பயணிகள் அலறியதால் பரபரப்பு appeared first on Dinakaran.