சென்னை வளசரவாக்கத்தில் பரபரப்பு பங்களாவில் பயங்கர தீ விபத்து பிரபல வக்கீல் மனைவியுடன் கருகி பலி: உயிர் தப்பிக்க முதல் மாடியில் இருந்து குதித்த வேலைக்கார பெண் இடுப்பு எலும்பு முறிந்தது

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பங்களா வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பிரபல வக்கீல், அவரது மனைவி உடல் கருகி பலியாகினர். 17 வயது பேரன் மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பினார். வேலைக்கார பெண் உயிர்தப்பிக்க குதித்த போது இடுப்பு எலும்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் நடராஜன் (78) தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நடராஜனுக்கு மனைவி தங்கம் (73), மகன் ஸ்ரீராம் (50), மருமகள் ஷியாமளா (45) மற்றும் பேத்தி ஸ்ரேயா (20), பேரன் ஸ்ரவன் (17) உள்ளனர். ஒரே மகனான ஸ்ரீராம் பிரபல ஆடிட்டராக உள்ளார். தந்தை நடராஜனுக்கு உதவியாக வழக்கறிஞராகவும் உள்ளார். ஸ்ரீராம் மகள் ஸ்ரேயா கல்லூரியில் படித்து வருகிறார். மகன் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நடராஜன் பங்களா வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி தங்கம் உடல் நலக்குறைவால் படுத்தபடுக்கையாக இருந்தார்.

ஸ்ரீராம் தனது மனைவி ஷியாமளா, மகள் ஸ்ரேயா ஆகியேருடன் நேற்று காரில் அடையார் சென்றிருந்தார். வீட்டில் நடராஜன், அவரது மனைவி தங்கம், பேரன் ஸ்ரவன், வேலைக்கார பெண் சரஸ்வதி (45) ஆகியோர் மட்டுமே இருந்தனர். வீட்டின் கீழ் தளத்தில் பூஜை அறை மற்றும் சமையல் அறை உள்ளது. பூஜை அறையில் 24 மணி நேரமும் விளக்கு எரிந்துகொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
நேற்று மதியம் 1.30 மணி அளவில் திடீரென வீட்டின் கீழ் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அந்த தீ வீடு முழுவதும் பற்றிப் பரவியது. பால் சீலிங் உள்ளிட்ட மர வேலைப்பாடுகள் இருந்ததால் தீ மளமளவென பிடித்து மேல்தளத்திலும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. முதல் தளத்தில் இருந்த நடராஜன், அவரது மனைவி, பேரன் மற்றும் வேலைக்கார பெண் சரஸ்வதி ஆகியோர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். உடல்நலமில்லா தங்கத்தை காப்பாற்ற மற்ற அனைவரும் போராடினர். அதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது. அனைவரும் அலறித் துடித்தனர்.

இதனால் நடராஜன் தனது பேரனையும் வேலைக்காரப் பெண்ணையும் மாடியில் இருந்து தப்பித்துச் செல்ல கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் கீழே குதித்தனர். ஸ்ரவன் லேசான காயடங்களுடன் உயிர் தப்பினார். வேலைக்கார பெண் இடுப்பு எலும்பு முறிந்து வலிதாங்க முடியாமல் உயிருக்கு போராடினார். கரும்புகையுடன் தீப்பிழம்போடு வீடு எரிவதை பார்த்து, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி, வளசரவாக்கம் பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்தன. 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காயங்களுடன் இருந்த ஸ்ரவன் மற்றும் வேலைக்கார பெண்ணை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கவச உடை அணிந்து வீட்டிற்குள் சிக்கியுள்ள ஸ்ரீராமின் பெற்றோரை மீட்க பங்களா வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து கொண்டு சென்றனர்.

ஒரு வழியாக 20 நிமிடங்களுக்கு மேல் போராடி நடராஜன், தங்கம் ஆகியோரை உடல் கருகிய நிலையில் மீட்டனர். உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிபத்து குறித்து வீட்டின் அருகில் இருந்தவர்கள் ஆடிட்டர் ஸ்ரீராமுக்கு தகவல் அளித்தனர். அதன்படி ஸ்ரீராம் அவரது மனைவி, மகள் ஆகியோருடன் வீட்டிற்கு விரைந்து வந்தனர். பெற்றோர் தீயில் கருகி இறந்ததை அறிந்து, ஸ்ரீராம் கதறி துடித்தது அங்கு இருந்தவர்களை கண் கலங்கவைத்தது.

தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுப்படுத்தினர். வீட்டில் இருந்த பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. ஏசியில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது பூஜை அறையில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த தீ விபத்தால் வளசரவாக்கம் பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.

* தீ விபத்தா, சதியா?
சென்னையில் பிரபல ஆடிட்டர்களில் ஒருவராக ஸ்ரீராம் இருந்து வருகிறார். இவர் பல்வேறு தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள, அரசியல்வாதிகளின் கணக்கு வழக்குகளை ஆடிட்டிங் செய்து வருகிறார். ஸ்ரீராம் பல கோடிக்கு அதிபதி என்றும் கூறுப்படுகிறது. ஸ்ரீராம் ஆடிட்டிங் கணக்கு வழக்குகளில் நேர்மையானவர் என்று கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு எதிரிகள் பலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது பங்களாவில் ஏற்பட்டது தற்செயலாக நடந்த தீ விபத்தா அல்லது சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் தான் தீ விபத்துக்கான முழுமையான விபரங்கள் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மழை குறுக்கிட்டதால் மீட்பு பணி பாதிப்பு
ஆடிட்டர் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென கரும்மேகம் சூழந்து பலத்த மழை பெய்தது. இதனால் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் வீரர்கள் ஏணிகள் மற்றும் அருகில் உள்ள கட்டிடத்தின் வழியாக பங்களா வீட்டிற்குள் நுழைந்து உயிரிழந்த தம்பதி உடல்களை ஒரு வழியாக மீட்டனர்.

* உரிய நேரத்தில் 6 சிலிண்டர்கள் மீட்பு
தீ விபத்தின் போது தீயணைப்பு வீரர்களின் ஒரு குழுவினர் சமையல் அறை மற்றும் தரைத்தளத்தில் உள்ள குடோனுக்கு சென்றனர். அங்கு நிரப்பட்ட 6 எரிவாயு சிலிண்டர் இருந்தது தெரியவந்தது. வீடு முழுவதும் தீ பரவிய நிலையில் உரிய நேரத்தில் வீரர்கள் 6 எரிவாயு சிலிண்டர்களை வெளியே கொண்டு வந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

The post சென்னை வளசரவாக்கத்தில் பரபரப்பு பங்களாவில் பயங்கர தீ விபத்து பிரபல வக்கீல் மனைவியுடன் கருகி பலி: உயிர் தப்பிக்க முதல் மாடியில் இருந்து குதித்த வேலைக்கார பெண் இடுப்பு எலும்பு முறிந்தது appeared first on Dinakaran.

Related Stories: