காத்து வாக்குல 2 கல்யாணம் தில்லாலங்கடி நர்சின் லீலைகள்: காவல் நிலையத்தில் நடந்த பஞ்சாயத்து

அருமனை: கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). கொத்தனார். இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. அபிஷாவின் சொந்த ஊர் குலசேகரம் அருகே உள்ள தும்பகோடு. திருமணத்துக்கு பின் அஜித்குமார் தனது மனைவி அபிஷாவின் வீட்டில் வசித்து வந்தார். அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக பணியாற்றினார். கடந்த 2ம் தேதி விடுமுறை முடிந்து வேலைக்கு சென்ற அபிஷா, அதன் பின்னர் அஜித்குமாரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தனது மனைவி எங்கே என்று அஜித்குமார் தேடி வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அபிஷா வேறொரு வாலிபரை 2வதாக திருமணம் செய்த வீடியோக்கள் வெளியானது. இதையடுத்து, தனது மனைவியை மீட்டு தருமாறு அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்து கதறினார்.

போலீசார் வழக்கு பதிந்து, வீடியோ காட்சிகள் குறித்து விசாரித்தனர். அப்போது 2வதாக திருமணம் செய்த கணவருடன் குமாரபுரம் பகுதியில் அவர் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று முன்தினம் அந்த வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்தவர்களிடம் அபிஷா குறித்து விசாரித்தனர். போலீசார் சென்றிருந்த சமயத்தில், அபிஷா தனது 2வது கணவருடன் விருந்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அப்போது தான் வந்திருந்தார். அவரிடம் முதல் கணவரான அஜித்குமார் குறித்து போலீசார் கூறினர். இதை கேட்டதும் திரு…திரு…வென விழித்த அபிஷா, தனது குட்டு அம்பலமானதை அறிந்து எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றார்.

அதன் பின்னர் நடந்த சம்பவத்தை போலீசார் 2வது கணவர் மற்றும் அங்கிருந்தவர்களிடம் விளக்கினர். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அபிஷா ஏற்கனவே திருமணமானவர் என்பது தனக்கு தெரியாது என்று, 2வது கணவர் கூறினார். இதையடுத்து அபிஷாவை போலீசார் அருமனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தகவலறிந்து முதல் கணவர் அஜித்குமாரும் காவல் நிலையம் வந்தார். புதிய தாலியுடன் நின்ற அபிஷாவை பார்த்த அஜித்குமார் நடந்த சம்பவத்தை மறந்து விடலாம். உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. என்னுடன் வந்து விடு என கெஞ்சினார். ஆனால் அபிஷா அஜித்குமாருடன் செல்ல முடியாது என கூறி விட்டார். 2வதாக அபிஷாவை மணம் முடித்தவர் எதுவும் சொல்லாமல் நின்றார். அவரது உறவினர்களும் பேச முடியாத நிலையில் இருந்தனர்.

இதையடுத்து அபிஷாவின் தாயாரை அழைத்த போலீசார், உங்கள் மகளை அழைத்து சென்று புத்திமதி கூறுங்கள். 2 நாட்கள் கழித்து முடிவெடுத்து வாருங்கள் என கூறி அனுப்பினர். இதையடுத்து அபிஷாவை அவரது தாயார் அழைத்து சென்றார். ஆனால் முதல் கணவரும், தற்போது அபிஷாவின் வீட்டில் இருப்பதால், அபிஷா தாயாருடன் செல்லாமல், தனது சித்தி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். அபிஷா யாருடன் வாழ போகிறார்? அவரை திருமணம் செய்த இரு வாலிபர்களின் நிலை என்ன? என்ற பரபரப்புக்கு விடை கிடைக்காத நிலை உள்ளது.

The post காத்து வாக்குல 2 கல்யாணம் தில்லாலங்கடி நர்சின் லீலைகள்: காவல் நிலையத்தில் நடந்த பஞ்சாயத்து appeared first on Dinakaran.

Related Stories: