வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே வன்னிய சமுதாயத்தை பயன்படுத்துகிறார்கள்: பாமக மாநாட்டில் அன்புமணி ஆவேசம்

சென்னை: வன்னியர்களை வெறும் வாக்கு வங்கிகளாக பயன்படுத்துகிறார்கள். தேர்தல் முடிந்ததும் கண்டுகொள்ளாமல் போய்விடுகிறார்கள் என சித்திரை நிலவு பெருவிழா மாநாட்டில் அன்புமணி ஆவேசமாக பேசினார். பாமக வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நேற்று மிக பிரமாண்டமாக நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாநாடு என்பதால் இதற்கு முன்பு நடந்த மாநாடுகளை விட சிறப்பாக நடத்த பாமக முடிவு செய்தது.

அதன்படி, இனமே எழு உரிமை பெறு என்ற வாசகத்தை முன்வைத்து மாநாட்டை நடத்தியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் மாநாட்டு திடலில் குவிந்தனர். சுமார் 2.5 லட்சம் இருக்கைகள் போடப்பட்டன. தொண்டர்கள் ஆரவாரத்துடன் விழாவில் கலந்துகொண்டனர். மாநாட்டிற்கு வந்த பாமகவினருக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வாசு, மாவட்ட அமைப்பு செயலாளர் தட்சிணா மூர்த்தி, ஒன்றிய செயலாளர் தனுசு, மாவட்ட துணை செயலாளர் மேடவாக்கம் ரமேஷ் ஆகியோர் உணவு, மோர், தண்ணீர் கொடுத்து வரவேற்றனர்.

மாநாடு துவக்கத்தில் பாமக தலைவர் அன்புமணி மேடைக்கு வந்ததும், பாராகிளைடரில் வன்னியர் சங்கக் கொடி பறக்கவிடப்பட்டது. கொடி பறந்ததை கண்டு தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும், மாநாட்டு கொடியை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். விழாவில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர் சமுதாயம். 12 ஆண்டுகளுக்கு முன்னர் காடுவெட்டி குருமூர்த்தி மாநாட்டை சிறப்பாக நடத்தினார்.

காடுவெட்டியின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம். இந்தியாவிலேயே ஓபிசி இடஒதுக்கீடு கொண்டு வந்தது நம்முடைய சத்திரியர்கள். ராமதாஸ் இல்லையென்றால் ஓபிசிக்கு கல்வியில் 27% இன்று இருந்திருக்காது. தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயத்திற்கு இன்றைக்கு படிப்பறிவு இல்லை. குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த சமுதாயத்தை ஆளும் கட்சிகள் வெறும் வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் நேரம் வந்தால் நம்மை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஏதாவது பிரச்னை வந்தால் நம்மை பயன்படுத்திக கொள்வார்கள். நம்மலும் போவோம், பிரச்னைகளை தீர்த்து வைப்போம். 20, 30, 50 கேஸ் வாங்குவோம். அப்புறம் முடிஞ்சு போச்சு.. டாட்டா… பாய் பாய்… இதுதான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.  எங்களுக்கு படிப்பு, வேலை, வாழ்வாதார உயர்வு வேண்டும். அதற்காக தான் இங்கே கூடியுள்ளோம்.

வன்னியர்கள் யார் யார் பின்னாடியோ சென்று கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் நடிச்சா அவங்க பின்னாடி போயிடுறீங்க..  நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி ராமதாசுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் தமிழ்நாடு அரசு எடுப்பார்களா? எவ்வளவு காலம்தான் எங்களை கெஞ்ச வைப்பீங்க… நான் முதலமைச்சர் ஆன பின்னர், பொறுப்புக்கு வந்த முதல் நாளே தமிழ்நாட்டில் எல்லா சமுதாயமும் என்ன நிலைமையில் இருக்கிறது என சர்வே எடுப்பேன்.

தமிழ்நாட்டில் 377 சமுதாயம் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு தான் இடஒதுக்கீடு செல்கிறது. எனவேதான் இடஒதுக்கீடு நடத்த சொல்கிறோம். தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும். இனி வரும் காலங்களில் நாம் ஒன்றாக இணைய வேண்டும். நீங்கள் அண்ணன் அன்புமணி பின்னால் வாருங்கள். இவ்வாறு தெரிவித்தார்.

* என்னை யாரும் ஏமாற்ற முடியாது: ராமதாஸ் பேச்சு
மாநாட்டில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: சமூக நீதிக்கான போராட்டங்களை யாராவது நடத்தி இருக்கிறார்களா? நான் என்னை தலைவர் என்று சொல்லிக் கொள்வது இல்லை. என்னை போன்று இந்தியாவில் யாரும் இல்லை. 50 ஆண்டுகள் உங்களுக்காக உழைத்து வருகிறேன். நான், ஆளப் போவதில்லை. அப்படி இருந்தால் அமைச்சராக இருந்திருப்பேன். தமிழ்நாட்டை ஆட்சி செய்திருப்பேன்.

கோட்டைக்கு சென்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஊமை ஜனத்துக்காக 10.5 சதவீதம் கொடுங்கள் என்று கேட்டுள்ளேன். இங்கு, யாரும் உழைக்காமல் இருக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும், மாடி வீடு, ஒரு கார் இருக்க வேண்டும். அந்த நிலையை, நான் உருவாக்கி உள்ளேன். உங்களை கேட்பது ஒரே ஒரு ஓட்டு. அன்றே, யானை சின்னத்தில் நின்று 4 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

இப்போது, என்ன ஆச்சு. அசிங்கமா இல்லையா உங்களுக்கு. எம்எல்ஏ என்று கூட பார்க்க மாட்டேன், தூக்கி கடலில் வீசி விடுவேன். சும்மா ஏமாத்திட்டு நான் கோட்டைக்கு போறேன், கோட்டைக்கு போறேன் என்று சொன்னால் அங்க போய் கோட்டையை பார்க்க தான் முடியும். எனக்கு, 87 வயது ஆக போகிறது. என்னை, யாரும் ஏமாற்ற முடியாது. நான் சொன்ன அனைத்தையும் கேட்டு உழையுங்கள். இவ்வாறு, ராமதாஸ் பேசினார்.

* 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை:
* வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு இணையாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சதவீதம் உயர்த்த வேண்டும்.
* ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
* கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்க வேண்டும்.
* தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
* அரசு துறையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
* உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பணிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்.
* பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

The post வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே வன்னிய சமுதாயத்தை பயன்படுத்துகிறார்கள்: பாமக மாநாட்டில் அன்புமணி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: