பொது சுகாதாரத்துறை தகவல்படி, ஐந்து வயதிற்குட்பட்ட இறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளில் சீராக குறைந்து வருகிறது, குறிப்பாக 2022-2023ம் ஆண்டில் 10.9 சதவீதமாக இருந்தது, இது 2024-2025ம் ஆண்டில் 8.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது: ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பதைத் தடுக்க, கூடுதல் மற்றும் நோய்த்தடுப்பு சேவைகளுடன் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பீட்டில் மாநிலம் முக்கியமாக கவனம் செலுத்துகிறது.
தமிழ்நாட்டின் இந்த வெற்றிக்கு முக்கியமாக சமூக நலத்துறை ஆற்றிய பங்கு உட்பட அனைத்து துறைகளும் உள்ளடக்கிய நடவடிக்கைகளே காரணமாகும். வயிற்றுப்போக்கு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் நேரடியாக ஏற்படும் இறப்புகள் இப்போது ஏற்படவில்லை. இருப்பினும் தற்போது நோய்த்தொற்றுகள் மற்றும் தற்செயலாக ஏற்படும் காயங்கள் உள்ளிட்டவை காரணமாக ஐந்து வயதிற்குட்பட்டவர்களின் இறப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகள் இறப்பை தடுக்க ஆறு மாதங்களுக்கு பிரத்யேக தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும், பொருத்தமான உணவை கொடுக்க வேண்டும்.
மேலும் இளம் தாய்க்கு குடும்பம், சமூகம் மற்றும் மருத்துவர்கள் உட்பட அனைவரின் ஆதரவும் தேவை. அதுமட்டுமின்றி அங்கன்வாடி மையங்களில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காண்பதற்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளுடன் இணைந்து அவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்குவதற்கும் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்தல்’ என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* கடந்த சில ஆண்டுகளாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை குறைப்பதில் தமிழ்நாடு நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது
* 2022-2023ம் ஆண்டில் 10.9 ஆக இருந்தது, இது 2024-2025ம் ஆண்டில் 8.2 ஆக குறைந்ததுள்ளது.
The post தமிழ்நாட்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு குறைவு: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.