நீதி கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது. நீதிக்கட்சியின் நீட்சி தான் இந்த ஆட்சி: தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நீதி கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது. நீதிக்கட்சியின் நீட்சி தான் இந்த ஆட்சி என தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் பேசியதாவது:
திராவிட இயக்கத்தின் வேராக விளங்கும் நீதிக்கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி.ராஜன் அவர்கள் குறித்த “வாழ்வே வரலாறு” என்ற நூலை நீதிக்கட்சியின் வழித்தடத்தில் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து நான் வெளியிடுவதில் என்னுடைய வாழ்நாளில் கிடைத்திருக்கக்கூடிய பெருமையாக நான் கருதுகிறேன்!

1936-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் First Minister-ஆக இருந்த பி.டி.ராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழ்நாட்டின் Chief Minister என்ற தகுதியோடு, அந்த பெருமையோடு நான் வெளியிடுகிறேன்! 1937 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டபோது, “என்றாவது ஒரு நாள் இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்” என்று பி.டி.ராஜன் அவர்கள் சொன்னார். முப்பது ஆண்டுகள் கழித்து, திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்று வெற்றியை பெற்றபோது, ‘பழிக்கு பழி வாங்கப்பட்டது’ என்று சொன்னார். தி.மு.க.வின் எழுச்சியை வெற்றியை நீதிக்கட்சியின் வெற்றியாக எண்ணி, ‘நீதிக்கட்சி மறுபடியும் வென்றது’ என்று அவர் சொல்லி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியும், தி.மு.க.வின் சாதனைகளும், செயல்பாடுகளும்தான், “1971 தேர்தலில், தி.மு.க.வுக்குத் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும்; பெரும்பான்மை பலத்தோடு கழக ஆட்சிதான் அமையவேண்டும்” என்று அறிக்கை வெளியிடுவதற்கு காரணமாக இருந்தது!

அந்தளவுக்கு, அழுத்தமான திராவிட இயக்கத் தலைவராக இருந்தவர் தான் பி.டி.ராஜன் அவர்கள். எந்தளவுக்கு பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும், பி.டி.ராஜன் அவர்களைப் போற்றினார்கள் என்றால், 1967-இல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, கழக அமைச்சர்களுக்கு எல்லாம் நீதிக்கட்சியின் சார்பில் ராயப்பேட்டை பகுதியில் இருக்கக்கூடிய உட்லண்ட்ஸ் உணவகத்தில் பி.டி.ராஜன் அவர்கள் ஒரு விருந்து வைத்தார். அப்போது உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார், “தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நிறைவேற்றுவேன்” என்று குறிப்பிட்டுவிட்டு, “தமிழவேள் பி.டி.ராஜன் போன்ற பெருந்தலைவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், எனது ஆட்சி நடைபெறும்’ என்று உறுதியளித்தார்.

“பி.டி.ராஜன் அவர்களது அரிய ஆலோசனைகளை நிறைவேற்றி வைக்கும் செயல் வடிவமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி திகழ்கிறது” என்று தலைவர் கலைஞர் சொன்னார். அந்த வழித்தடத்தில்தான் நாமும் இன்றைக்கு பயணித்துக் கொண்டு இருக்கிறோம்! 1973-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த பி.டி.ராஜன் அவர்களுடைய 82-ஆவது பிறந்தநாள் விழாவில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் அமைச்சர் பெருமக்களாக இருந்த நாவலர், பேராசிரியர் என்.வி.நடராசன் என்று பலரும் கலந்துகொண்டார்கள். அந்த உணர்வு சிறிதும் குறையாமல், இன்றைக்கு 133-ஆவது ஆண்டு விழாவில், நம்முடைய திராவிட மாடல் அமைச்சரவை கலந்து கொண்டு இருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்… விழாவின் அழைப்பிதழில், நீதிக்கட்சியின் இறுதித் தலைவராகவும் இருந்த” என்று போட்டிருக்கிறீர்கள்… நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்… “நீதிக்கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது!” இன்னும் சொல்கிறேன்… “நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி” என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன்.
ஏனென்றால், 1967-இல் நாம் ஆட்சிக்கு வந்தபோது, ‘திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தது’ என்று சில ஊடகங்களில் எழுதினார்கள்…அப்போது பேரறிஞர் அண்ணாதான் சொன்னார்… “அரசியல் தேர்ச்சியுடன் நாடாண்ட நீதிக்கட்சியின் பாரம்பரியத்தில் வளர்ந்த கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” என்று சொன்னார். நீதிக்கட்சியின் செயலாளர்களில் ஒருவராக இருந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் என்ன சொன்னார் என்றால், “நீதிக்கட்சி, இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, பாட்டன் முறை. பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், தந்தை முறையாகும்.” என்று குறிப்பிட்டார்.
இதையெல்லாம் கடந்து, 1966-ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் பவளவிழா பொதுக்கூட்டத்தில், “இன்றைய தி.மு.க.வினர் நம்முடைய வாரிசுகள்தான்’ என்று பி.டி.ராஜன் அவர்களே குறிப்பிட்டார். எனவே. நான் அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான்!

பி.டி.ராஜன் அவர்களுக்கு நம்முடைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல, நானும் வாரிசுதான் ! திராவிட வாரிசுகள்! இங்கே இருப்பவர்கள் எல்லோரும் திராவிட வாரிசுகள்! வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது. பற்றிக்கொண்டு எரிகிறது. அப்படி எரியட்டும் என்று தான் நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு எப்படி திராவிடத்தை ஒழிப்போம் என்று சில கைக்கூலிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதே மாதிரி, பி.டி.ராஜன் அவர்கள் காலத்திலும், “நீதிக்கட்சியை குழி தோண்டி பாதாளத்தில் புதைத்துவிடுவேன்” என்று ஒரு தலைவர் சொன்னார். ஆனால், பி.டி.ராஜனோடு தொடர்ச்சியாக, பண்பாளர் பழனிவேல் ராஜன் வந்தார்; இப்போது, பழனிவேல் தியாகராஜனும் நம்முடன் இருக்கிறார்.

நம்முடைய பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பொறுத்தவரைக்கும். அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்க கூடியவர். நான் அவருக்கு கூற விரும்புவது, இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகதான் இருக்கவேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் அதை சொல்கிறேன் என்றால், அது அவருக்கே தெரியும். நம்முடைய எதிரிகள், வெறும் வாயையே மெல்லக் கூடிய விநோத ஆற்றல் பெற்றவர்கள்… அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது என்பதை கழகத் தலைவராக மட்டுமல்ல, உங்கள் மீது இருக்கின்ற அக்கறை கொண்டவனாகவும், அறிவுரை வழங்க கடமைப்பட்டிருக்கிறேன். என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்!

திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி.ராஜன் அவர்கள் குறித்த இந்த “வாழ்வே வரலாறு” நூல் மிகப்பெரிய வரலாற்றுக் கருவூலம்! தனிப்பட்ட ஒரு மனிதரின் வரலாறாக இல்லாமல், ஒரு நூற்றாண்டின் வரலாறாக, நீதிக்கட்சியின் வரலாறாக, நீதிக்கட்சியின் முன்னோடிகள், நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், சுயமரியாதை இயக்கம் என்று எல்லாவற்றைப் பற்றியும் இந்த நூல் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்! இப்படிப்பட்ட கருவூலத்தை உருவாக்கிய பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

எல்லோருடைய வாழ்க்கையையும் வரலாறு என்று சொல்லிவி முடியாது… சிலரின் வாழ்க்கையைத்தான் அப்படி சொல்ல முடியும்! அப்படிப்பட்டவர்தான் பி.டி.ராஜன்!

  • 1920 முதல் தொடர்ந்து 17 ஆண்டுகள், சட்டமன்ற உறுப்பினர்!
  • பொப்பிலி அரசர், பி.முனுசாமி ஆகியோர் அமைச்சரவையில் அமைச்சர்!
  • சென்னை மாகாணத்திற்கு முதலமைச்சர்!
  • தந்தை பெரியார் நடத்திய முதலாவது சுயமரியாதை மாநாட்டில் கொடியேற்றி வைத்தவர்!
  • இந்துசமய அறநிலைய வாரியம் அமைக்க எல்லா முயற்சிகளையும் எடுத்த ஆன்மீகவாதி!
  • 1952-ஆம் ஆண்டு தேர்தலில் கம்பம் தொகுதியில் வென்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினர். இப்படி, வரலாறாக வாழ்ந்தவர்தான் பி.டி.ராஜன் அவர்கள் ! அவரது சாதனைகளில் சிலவற்றை பட்டியலிட்டு சொல்லிக்கொண்டே போகலாம்.
  • அவரது ஆட்சி காலத்தில் தான், கூட்டுறவுத் துறை பொதுப்பணித் துறை பத்திரப் பதிவுத் துறை துறை ஆகியவை மேம்படுத்தப்பட்டது. கால்நடைத் கூட்டுறவுச் சட்டத்தை இயற்றினார்.
  • நிலவள வங்கியை தொடங்கினார்.
  • சிறுதொழில் வளர்ச்சிக்கு சட்டம் கொண்டு வந்தார்.
  • மதுரைத் தமிழ்ச் சங்கத்தை 1940 காலக்கட்டத்தில் வளர்த்தார்.
  • அரசியல் பணியோடு ஆன்மீகப் பணியையும் இணைத்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், வடபழனி முருகன் கோயில், பழமுதிர்சோலை ஆகிய கோயில்களுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்தார்.
  • 1957-இல் சட்டமேலவை உறுப்பினரானார்.
  • சர் பட்டத்தை துறந்தார்.
  • 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தலைமை உரையாற்றினார்.

இப்படி வாழும் போதே வரலாறாக வாழ்ந்தவர்தான் பி.டி.ராஜன் அவர்கள். சமூகநீதி – சமத்துவம் -மாநில சுயாட்சி இந்தியக் கூட்டாட்சி ஆகிய கருத்துகளை தமிழ் மண்ணில் பரப்பி, ஒரு அரசியல் இயக்கத்தின் கொள்கையாக மாற்றி ஆட்சியின் கொள்கையாகவும் அதனை ஆக்கிய பெருமை நீதிக்கட்சிக்கு உண்டு. அதை மிகச் சிறப்பாக செய்த தலைவர்களில் முக்கியமானவர் பி.டி.ராஜன் .

நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகமாக மாற்றும் முடிவை தந்தை பெரியார் எடுத்தபோது, பி.டி.ராஜன் அவர்கள் அதை ஏற்காமல், அதே பெயருடன் தொடரவேண்டும் என்று சொன்னாலும், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து எந்தக் காலத்திலும் அவர் மாறவே இல்லை. அவரது பேச்சும், எழுத்தும் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

  • 1938-ஆண்டு மொழிப்போராட்டத்தின்போது, தமிழவேள் பி.டி.ராஜன் அவர்கள் பேசியபோது சொன்னார், “நாம் இந்தி எதிர்ப்பாளர்கள் அல்ல, இந்தியை திணிப்பவர்களின் எதிர்ப்பாளர்கள்” என்று அன்றைக்கே விளக்கமாக பேசியவர்! அவர் அன்றைக்கு சொன்னதை நாம் இன்றைக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்! டில்லியின் ஆதிக்க மனோபாவமும் மாறவில்லை நம்முடைய போராட்ட குணமும் ஒயவில்லை! அன்றைக்கு, பி.டி.ராஜன் அவர்கள், இராஜாஜியைப் பார்த்து கேட்டார்; நாம் இன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க.-வைப் பார்த்து கேட்டுக்கொண்டு இருக்கிறோம்!

நம்முடைய எதிரிகளின் முகங்கள்தான் மாறியிருக்கிறதே தவிர அவர்கள் உள்ளமும் – எண்ணமும் இன்னும் மாறவில்லை! அது மாறும் வரை நம்முடைய போராட்டம் ஓயாது தொடரும்! ஈராயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களாக இருப்பவர்களுக்கும், அடிமைகள் ஆகமாட்டோம் என்று மறுப்பவர்களுக்கும் இடையிலான இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த உணர்வின் வெளிப்பாடாகதான், திருவள்ளூரில் அண்மையில் நான் பேசுகின்றபோது சொன்னேன், “தமிழ் மண்ணை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது” என்று உறுதியோடு சொன்னேன்.

தமிழவேள் பி.டி.ராஜன் பத்து கட்டளைகளில் சொல்லியிருக்கிறார். அதில் ஒன்று – வெற்றியோ, தோல்வியோ இதில் எதுவாகினும் நிற்க நிலை மாறதெனில், அப்படிதான் தி.மு.க-விம், நம்முடைய திராவிட மாடல் அரசும் கம்பீரமாக நிற்கிறது! நம்முடைய இந்த வலிமைக்கும் – மனவுறுதிக்கும் – கொள்கை பிடிப்புக்கும் பி.டி.ராஜன் போன்ற திராவிடத் தலைவர்கள் நம் தமிழ் மண்ணில் விதைத்திருக்கும் விதைதான் காரணம்!

இங்கே பேசும்போது முன்னாள் நீதியரசர் சொன்னார், உங்கள் கைகளில் இருக்கும் இந்த விழாவின் அழைப்பிதழைப் பாருங்கள்… “மக்கள் பிறக்கலாம்; இறக்கலாம். கட்சிகள் தோன்றலாம்; மறையலாம். வல்லரசுகள் எழுச்சி பெறலாம்; வீழ்ச்சியடையலாம். ஓர் அமைப்பு என்ற முறையில் நீதிக்கட்சி மறையலாம். ஆனால், அந்தக் கட்சி எந்தக் கொள்கையின் அடிப்படையில் தோன்றியதோ அந்தக் கொள்கை என்றைக்கும் நிலைத்து நிற்கும்” என்று தமிழவேள் பி.டி.ராஜன் சொல்லியிருப்பதற்கு இந்த அரங்கில் இருக்கும் நாமும் – கோடிக்கணக்கான மக்களின் ஆதரவால் உருவாகியிருக்கும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியும்தான் சாட்சி!

பி.டி.ராஜன் அவர்கள் சொன்னார், “திராவிட இயக்கத்தின் கொள்கையைப் பேச ஒரே ஒருவர் உறுதியோடு இருந்தால் போதும். அந்தக் கொள்கை வளர்ந்துவிடும்” என்று சொன்னார். இன்றைக்கு ஒருவரல்ல, கோடிக்கணக்கானோர் திராவிடக் கொள்கைகளை பேசிக்கொண்டு இருக்கிறோம்!

இந்த முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்த பெருமக்களான தியாகராயர் – டி.எம்.நாயர் – நடேசனார் – பனகல் அரசர் – சௌந்தரபாண்டியனார் – ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோர் வரிசையில் போற்றத்தக்க பெருமகனாக விளங்கிய தமிழவேள் பி.டி.ராஜன் புகழ் வாழ்க! அவரது கனவுகள் வெல்க என முழங்கி விடைபெறுகிறேன் என முதல்வர் பேசியுள்ளார்.

The post நீதி கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது. நீதிக்கட்சியின் நீட்சி தான் இந்த ஆட்சி: தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: