விறகு சேகரிக்கச் சென்றபோது மனநல குறைபாடுடைய 13 வயது சிறுமி பலாத்கார கொலை: மணிப்பூரில் அடுத்தடுத்து கொடூரம்

கவுகாத்தி: மணிப்பூரில் விறகு சேகரிக்கச் சென்றபோது மனநலம் பாதித்த 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டம் தன்லோன் வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை, ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். இந்தச் சம்பவம் தொடர்பாக அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பலாத்கார கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் மாலை வனப் பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது தந்தை தனது மகளை தேடத் தொடங்கினார். வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது தனது மகளின் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையிலும், உடலில் காயங்களுடனும் கிடந்ததை பார்த்து அதிர்ச்சிடைந்தார். போலீசுக்கு தகவல் கிடைத்த பின்னர், சம்பவ இடத்திற்கு சென்று அந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகிறோம்.

முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்டனர் என்று கூறப்படும் 20 வயதுடைய நபர், அந்த சிறுமியை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். முன்னதாக இந்த மாதத் தொடக்கத்தில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர். மார்ச் மாதத்தில், இதே மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அச்சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் மற்றும் ரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்டார். இவ்வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மணிப்பூரில் சிறுமிகள் அடுத்தடுத்து கொல்லப்படும் சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர்.

The post விறகு சேகரிக்கச் சென்றபோது மனநல குறைபாடுடைய 13 வயது சிறுமி பலாத்கார கொலை: மணிப்பூரில் அடுத்தடுத்து கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: