சென்னை: தீபாவளி பண்டு சீட்டு நடத்தி 595 பேரிடம் ரூ.66.90 லட்சம் மோசடி செய்த வழக்கில், அண்ணன், தங்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ஆர்.எஸ் எண்டர்பிரைசர்ஸ் என்ற பெயரில் கோகுல்நாத் மற்றும் அவரது சகோதரி சவுமியா ஆகியோர் கடந்த 2022 முதல் 2023ம் ஆண்டு வரை தீபாவளி பண்டு சீட்டு நடத்தினர். இந்த பண்டு சீட்டில் மாதம் ரூ.1000 முதல் 12 மாதங்கள் பணம் கட்டினால் 12வது மாதம் முடிவில் ரூ.15 ஆயிரம் தருவதாக கூறினர்.
மேலும், 30 கார்டுகள் சேர்த்துவிட்டால் ஒரு கார்டுக்கான ரூ.15 ஆயிரம் இலவசமாக தருவதாக கூறினர். அதன்படி தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கப்பக்கத்தினர் என 595 பேர் சேர்த்து மொத்தம் ரூ.66.90 லட்சம் கோகுல்நாத்திடம் கட்டினோம். ஆனால் ெசான்னபடி சீட்டு முதிர்வு முடிவில் பணம் தரவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வியாசர்பாடியை சேர்ந்த கோகுல்நாத் (35) மற்றும் அவரது சகோதரி சவுமியா (32) ஆகியோர் பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் கோகுல்நாத் மற்றும் சவுமியா ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
The post தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.66.90 லட்சம் மோசடி: அண்ணன், தங்கை சிக்கினர்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.