மயிலாடுதுறை அருகே கத்தி முனையில் பியூட்டி பார்லர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: அதிமுக நிர்வாகி அதிரடி கைது

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை அருகே கத்தி முனையில் பியூட்டி பார்லர் பெண் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுட்டதாக அதிமுக நிர்வாகி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே மேலப்பாதி மேலத்தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் அப்பு (எ) தினகரன்(28). திருமணமான இவர், அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 20ம்தேதி 23 வயதான இளம்பெண் நடத்தும் பியூட்டி பார்லருக்கு அப்பு சென்றுள்ளார்.

தனது நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள் மேக்கப் செய்ய வேண்டும் என்று கூறி அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். இதை நம்பி அந்த இளம்பெண் அவரது டூவீலரில் ஏறி சென்றுள்ளார். செம்பனார்கோயில் ரயிலடி பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அந்த பெண்ைண தனது டூ வீலரில் அப்பு அழைத்து சென்றுள்ளார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீடு இருந்ததால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண், வீட்டிற்குள் செல்ல மறுத்துள்ளார். அப்போது அப்பு, தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அத்துமீறி அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதில் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அப்பு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் செம்பனார்கோயில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பு (எ) தினகரனை நேற்று மாலை கைது செய்தனர்.

The post மயிலாடுதுறை அருகே கத்தி முனையில் பியூட்டி பார்லர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: அதிமுக நிர்வாகி அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: