கஞ்சா வழக்கில் 12 ஆண்டு சிறை நீதிபதிக்கு கைதிகள் கொலை மிரட்டல்: மதுரை நீதிமன்றத்தில் கண்ணாடியை உடைத்து ரகளை

மதுரை: கஞ்சா வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்து கண்ணாடியை உடைத்து கைதிகளான சகோதரர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கீரைத்துறை பகுதியில் கடந்த 7.3.2024ல் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டியராஜன் (23), பிரசாந்த் (22), மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா (20) ஆகியோரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் வழக்கை விசாரித்து மூன்று பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து மூவரையும் சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் தயாரானபோது, தீர்ப்பை கேட்டு ஆத்திரமடைந்த பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் ஆகிய இருவரும் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்து பலத்த குரலில் கூச்சல் எழுப்பியவாறு நீதிமன்றத்தின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் கையில் கண்ணாடி குத்தியதில் ரத்தம் வடிந்தது.

அப்போது இருவரும், ‘‘நாங்கள் வெள்ளை காளியின் கூட்டாளிங்க… கிளாமர் காளி கொலையில் எதற்கு சுபாஷ் சந்திரபோசை என்கவுன்டர் செய்தீர்கள்? நாங்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், நீதிபதியை கொல்லாமல் விடமாட்டோம்’’ என கூச்சலிட்டனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தவாறு பலத்த பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக இருவர் மீதும் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் நீதிமன்றத்திற்குள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கஞ்சா வழக்கில் 12 ஆண்டு சிறை நீதிபதிக்கு கைதிகள் கொலை மிரட்டல்: மதுரை நீதிமன்றத்தில் கண்ணாடியை உடைத்து ரகளை appeared first on Dinakaran.

Related Stories: