கும்பகோணம் : கும்பகோணத்தில் வெளி மாநிலத்தில் இருந்து சொகுசு காரில் கடத்தி கொண்டுவரப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் சினிமா பாணியில் துரத்தி பிடித்து பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சிலர் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் கும்பகோணம் ஏஎஸ்பி அங்கிட் சிங் மேற்பார்வையில், கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் கும்பகோணம் அடுத்த கீழக்கொட்டையூர் பகுதியில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை போலீசார் சோதனை செய்வதற்காக நிறுத்தினர். ஆனால் அந்த சொகுசு கார் நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக போலீஸ் ஜீப்பில் சொகுசு காரை வேகமாக துரத்தி சென்றனர்.
போலீசார் பின்தொடர்வதையறிந்த சொகுசு கார் டிரைவர் வேகமாக ஓட்டியுள்ளார். போலீசாரும் சினிமா பாணியில் அந்த சொகுசு காரை துரத்தி சென்று வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் அந்த சொகுசு காரை சுற்றி வளைத்த போலீசார் காரை சோதனை செய்த போது அதில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மூட்டைகளில் அடைக்கப்பட்டு கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்வதற்காக கடத்திவரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த காரில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த காரில் வந்தது கும்பகோணம் அரியதிடல் சில்வர்நகர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் பிரகாஷ்(40), சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதிநகர் பகுதியை சேர்ந்த ஸ்வரூப் சிங் மகன் ரோனக்சிங்(22), ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், மான்புரா முஹல்லா பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் மண்மோகித் வைஷ்ணவ்(27) ஆகியோர் என்பதும், அவர்கள் மூவரும் சேர்ந்து வெளி மாநிலத்திலிருந்து புகையிலை மற்றும் குட்கா பொருட்களை கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்வதற்காக கடத்திக்கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கடத்தி வந்த புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் மற்றும் சொகுசு உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post கும்பகோணத்தில் சொகுசு காரில் கடத்தப்பட்ட ரூ.8லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.