மதுரை நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல்.. கஞ்சா வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் குற்றவாளி ஆத்திரம்!

மதுரை: மதுரையில் கஞ்சா வழக்கில் சிறை விதிக்கப்பட்ட நபர்கள் நீதிபதிக்கு நீதிமன்ற வளாகத்திலேயே பகிரங்க கொலை மிரட்டல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கின் விசாரணை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாண்டியராஜன், பிரசாந்த், சரண்யா ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியராஜன், பிரசாந்த் ஆகியோர் நீதிமன்றத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரத்தம் சொட்ட சொட்ட ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

அப்போது காவலரை குற்றவாளி காலால் உதைத்தார். காவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதியை தகாத வார்த்தையால் திட்டிய குற்றவாளி சிறையில் இருந்து வெளியே வந்து நீதிபதியை கொலை செய்து விடுவோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். பிரபல ரவுடி வெள்ளை காளியின் கூட்டாளிகள் என்று கூறிய குற்றவாளிகள் ரவுடி சுபாஷ் சந்திரபோஸை என்கவுண்டர் செய்தது ஏன் என்று ஆவேசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் மீண்டும் கைது செய்துள்ளது.

The post மதுரை நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல்.. கஞ்சா வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் குற்றவாளி ஆத்திரம்! appeared first on Dinakaran.

Related Stories: