விழுப்புரம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இப்போதே உட்கட்சி பூசல், நிர்வாகிகள் மோதல் வலுத்துள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி பதவிகளுக்கு பணம் வசூலிப்பதாகவும், கட்சி தலைமை பெயரை வைத்துதான் பணம் பறிப்பதாகவும் அதிருப்தியாளர்கள் நேரடியாக குற்றம் சாட்டினர். விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தவெக நிர்வாகிகள், கட்சி தலைமை கேட்பதாக கூறி இங்கிருந்த மாவட்ட நிர்வாகிகள் ரூ.15 லட்சம் வரை பணம் பறித்ததாகவும், பணம் கொடுக்காதவர்களின் பதவியை பறித்ததாகவும் குற்றம் சாட்டினர். மேலும் கட்சி தலைமை கேட்டதற்காக கொண்டு வந்த காசோலையையும் கிழித்தெறிந்தனர். அதுமுதல் இரு கோஷ்டிகளாகவே விழுப்புரம் மாவட்டத்தில் தவெக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிருப்தி கோஷ்டியினர் மீது தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நேற்று பிற்பகல் தாலுகா காவல்நிலையத்தில் செல்வவிநாயகம் தலைமையில் இரு கோஷ்டியினரையும் அழைத்து விசாரணை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த தவெகவினர் ஒவ்வொரு அணியாக மீடியாவுக்கு பேட்டியளித்தனர். அப்போது கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட அதிருப்தியாளர்கள் கட்சி துண்டை போட்டுக்கொண்டு பேட்டி கொடுத்தனர். உடனே மாவட்ட செயலாளர் தரப்பினர் உங்களை கட்சியிலிருந்து நீக்கி விட்டோம் எப்படி துண்டு போடலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்தரப்பினர் கட்சி தலைமை எங்களை நீக்கவில்லை, விஜய் ரசிகராக நாங்கள் இந்த துண்டை போட்டிருக்கிறோம் என்று கூறியதையடுத்து இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
The post பதவிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல் காவல் நிலையம் முன்பு தவெகவினர் திடீர் மோதல்: விழுப்புரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.