கரூர்: கரூர் தாந்தோணிமலை அடுத்த தெற்குகாந்தி கிராமத்தை சேர்ந்தவர் தியாகு (47). தொழிலதிபர். இவரை, நண்பர்களான பொன்னரசன், சுரேஷ் ஆகியோர் தொழில் சம்பந்தமாக திண்டுக்கல் சென்று வரலாம் என்று கடந்த 23ம்தேதி காரில் அழைத்து சென்றனர். இந்நிலையில் அன்று மதியம் 1 மணியளவில் தியாகுவின் உறவினரான சிந்தாமணிப்பட்டியை சேர்ந்த அஜித் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட இவர்கள், தியாகு உயிரோடு வேண்டும் என்றால் ரூ.15 லட்சம் அனுப்பி வைக்க வேண்டும். இல்லை என்றால் அவர் உயிரோடு இருக்க மாட்டார் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அஜித், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், அஜித்துக்கு வந்த போன் எண்ணை டிரேஸ் செய்தபோது, மதுரை மாவட்டம் கோச்சடை டோல்பிளாசா அருகே டவர் காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு கோச்சடை ேடால் பிளாசா அருகே காரில் இருந்த தியாகு மற்றும் பொன்னரசன், சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரையை சேர்ந்த கண்ணன், முத்துப்பாண்டி, குமார், சிவகங்கை ரவிக்குமார், உசிலம்பட்டி சிவக்குமார், மதுரையை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் எஸ்ஐ கருப்பசாமி ஆகியோர் தியாகுவை கடத்தி வர சொன்னது தெரியவந்தது.
இதில், தியாகு ஒரிஜனல் இரிடியம் வைத்துள்ளதாக வந்த தகவலின் பேரில் அவரை பொன்னரசன், சுரேஷ் மூலம் கடத்தி வந்ததாகவும், ஆனால் தியாகு தன்னிடம் இரிடியம் இல்லை என்றதால், பணம் பறிக்க அவரது உறவினர் அஜித்துக்கு போன் செய்து மிரட்டி ரூ.15லட்சம் கேட்டதும் அஜித்தும், சிவக்குமாரின் வங்கி கணக்குக்கு ரூ.50 ஆயிரம் அனுப்பியதும் தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, கண்ணன், முத்துப்பாண்டி, ரவிக்குமார், குமார், சிவக்குமார், ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
The post ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்; தொழிலதிபரை காரில் கடத்திய எஸ்.ஐ. கைது: மேலும் 5 பேரும் சிக்கினர் appeared first on Dinakaran.