தொழிலாளி கொலை வழக்கில் சகோதரர்கள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருச்சி: சமயபுரத்தில் பூஜை பொருட்கள் விற்பனை கடை ஊழியர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருச்சி மாவட்டம் சமயபுரம் எஸ்.கல்லுக்குடியை சேர்ந்தவர் பாபு(28). இவர், சமயபுரம் கோயிலுக்கு வெளிப்பகுதியில் தேங்காய், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மேலும், சமயபுரம் கோயிலுக்கு வரும் பக்தர்களை கோயிலுக்குள் சிறப்பு தரிசனத்துக்கு அழைத்து சென்றும் வந்தார்.

சமயபுரம் அடுத்த வீ.துறையூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் சுள்ளான்(எ)வெங்டேஸ்வரன்(27) என்பவரும் பக்தர்களை கோயிலுக்கு சிறப்பு தரிசனத்துக்கு அழைத்து செல்லும் வேலை பார்த்து வந்தார்.பக்தர்களை அழைத்து செல்வதில் பாபு, சுள்ளான் இடையே போட்டியும், பிரச்னையும் இருந்தது. இந்நிலையில் கடந்த 6.5.23 அன்று, டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்ற பாபுவுக்கும், சுள்ளானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது சுள்ளான், அவரது சகோதரர்கள் கணேசன்(எ)கடலை கணேசன்(35), விநாயக மூர்த்தி(25), வள்ளி அருணன்(21) ஆகியோர் சேர்ந்து பாபுவை அடித்து கொன்றனர்.

இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து அண்ணன், தம்பி 4 பேரையும் கைது செய்தனர். திருச்சி 2வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் சுள்ளான் உள்பட 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

The post தொழிலாளி கொலை வழக்கில் சகோதரர்கள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: