பெரம்பலூர், ஏப்.12: வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு வாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி அருள்மிகு பால தண்டாயுத பாணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக் கணக்கானோர் பால்குடம் மற்றும் காவடியுடன் ஊர்வலம்- அரோகரா அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் கிராமத்தில் அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலும், இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பிலும் உள்ள இந்தக் கோயில் பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாகவிளங்கி வருகிறது. தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள பிரகதீஸ்வரர் திருக்கோயிலுக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பாக பராந்தக சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப் பட்டது இந்தக் கோயில். இக்கோயிலில் 7அடி உயரமுள்ள பால தண்டாயுத சுவாமி வடக்கு பார்த்த நிலையில் எழுந்தருளியுள்ளார். நேற்று இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வாலிகண்டபுரம் கிராமத்தின் முக்கிய வீதிகளில்அரோகரா முழக்கத்தோடும் நடனமாடியும் திருக்கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள், திருநீறு உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் வாலிகண்டபுரம் மட்டுமன்றி பெரம்பலூர், பிரம்மதேசம், வி.ஆர்.எஸ்.எஸ்.புரம், வல்லாபுரம், தம்பை, தேவையூர், எறையூர், ரஞ்சன்குடி, சாத்தனவாடி, மேட்டுப்பாளையம், பாத்திமாபுரம், அனுக்கூர், அ.குடிக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.பூஜைகளை கோயில் குருக்களான ஜெயச்சந்திரன், குமார், செல்லப்பா ஆகியோர் கூட்டாக இணைந்து செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிருத்திகை சங்கத்தினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
The post வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் பாலதண்டாயுதபாணிக்கு மகா அபிஷேகம் appeared first on Dinakaran.