14ம் தேதியும் திறப்பு கேள்விக்குறி புதுச்சேரி, ஏப். 12: புதுச்சேரியில் தற்காலிக பேருந்து நிலையத்தில் அரசின் மெத்தனத்தால் பயணிகள், பொதுமக்களுக்கான நிழற்குடை இல்லாத நிலையில் முக்காடு போட்டு மக்கள் மழை, வெயில் காலங்களில் கடுமையாக அவதியுறும் நிலை நீடிக்கிறது. சுற்றுலா பயணிகள் படையெடுக்கும் நகரங்களில் தற்போது புதுச்சேரியும் சேர்ந்துள்ளது. புதுச்சேரி அரசு சுற்றுலாவை பயணிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் புதுச்சேரிக்கு பேருந்து சேவை ஒன்றே பிரதான போக்குவரத்தாக உள்ளது. அதுவும் பெரும்பாலான பேருந்துகள் தனியார் வசமே உள்ளன.
இதுபோன்ற சூழலில் புதுச்சேரி அரசு மறைமலை சாலையில் உள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவெடுத்தது. இதனால் பேருந்து நிலையம் புதுச்சேரி- கடலூர் சாலையில் ரோடியர் மில் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அரசு அதிரடியாக அந்த இடத்தில் பேருந்து சேவையை தொடங்கியது. பேருந்து நிலையம் அமைத்தது முதல் தற்போது வரையிலும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
முன்பு மழை காலத்தில் மக்கள் அவதியடைந்த நிலையில் தற்போது கோடை வெயில் உச்சத்தை தொட்டுவரும் நிலையில் போதிய நிழற்குடை இல்லாமல் உச்சி வெயிலில் மக்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலையை காண முடிகிறது. இதுமட்டுமின்றி முதியோர்கள், நோயாளிகள் பலர் பேருந்துக்காக காத்திருந்து வெயிலின் கொடுமையால் மயங்கி விழும் நிலையும் உள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் புதிய பேருந்து நிலையம் பணிகள் முடிந்து ஏப்.14ம் தேதி திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அதுவும் உறுதி செய்யப்படாத நிலையே இதுவரையிலும் உள்ளது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆன நிலையில் அரசு இன்னும் புதிய பேருந்து நிலையத்தை திறக்காமல் இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மழையிலும், வெயிலிலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் படும் அவஸ்தையை அரசு கருத்தில் கொண்டு உடனடியாக புதிய பேருந்து நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.
The post புதுச்சேரி புதிய பஸ் நிலையம் திறப்பு எப்போது? அரசின் மெத்தனத்தால் அவதியுறும் பயணிகள், பொதுமக்கள் appeared first on Dinakaran.