புதுவையில் சரிந்த தர்பூசணி வியாபாரம் விவசாயிகள், வியாபாரிகள் கவலை

 

புதுச்சேரி, ஏப். 12: கோடைக்கலாம் வந்தாலே பொதுமக்கள் பழச்சாறு கடைகளிலும், தர்பூசணி போன்ற இயற்கை குளிர்பான பழக்கடைகளையும் நோக்கி படையெடுப்பது வாடிக்கை. அதிலும் தர்பூசணி பழம் மலிவான விலையில் கிடைப்பதால் அனைவரும் போட்டிபோட்டு இந்நாட்களில் வாங்குவார்கள். அதேபோல் இந்த வருடமும் கோடை காலத்தில் தர்பூசணி வியாபாரம் அமோகமாக தான் தொடங்கியது.

வியாபாரிகள், விவசாயிகளிடம் போதிய விலை கொடுத்து வாங்கிய பழங்களை லாரிகளில் லோடுகளை ஏற்றிவந்து புதுச்சேரியின் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் முக்கிய சந்திப்புகளில் ஆங்காங்கே சாலையோரம் குவித்து வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் சமீபத்தில் தர்பூசணி தொடர்பாக இணையத்தில் பரவிய சர்ச்சைக்குரிய காணொளிகளை பார்த்து மக்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அச்சமடைந்தனர்.

இதனால் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதை குறைத்து விட்டதால் முன்பிருந்ததுபோல் இல்லாமல், வியாபாரம் சற்று டல் அடிப்பதாக வியாபாரிகள் குமுறுகின்றனர். அதாவது தர்பூசணியில் செயற்கையாக ரசாயன சாயமும், இனிப்பு சுவைக்காகவும் ஊசிகள் மூலம் செலுத்தி வியாபாரம் செய்யப்படுவதாக வெளியான தகவலை எதிர்த்து தர்பூசணி வியாபாரிகளும், விற்பனையாளர்களும் போர்க்கொடி தூக்கினர்.

இதுபோன்ற போலியான தகவல்களை பரப்புவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனைக்கு யாரோ மறைமுகமாக துணைபோகும் வகையில் இத்தகைய செயல்பாடுகள் அமைந்திருப்பதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இருப்பினும் அடுத்தடுத்த வாரங்களில் தர்பூசணி விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post புதுவையில் சரிந்த தர்பூசணி வியாபாரம் விவசாயிகள், வியாபாரிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: