நாமக்கல், ஏப்.12: நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 321 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில், காலியாக உள்ள 321 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த பிடிஓ அலுவலகத்தில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம்.
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஒராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு காலமுறை விகிதத்தில் (ஊதியநிலை- 1 ரூ.3000- 9000) சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். நியமனம் கோரும் மைத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும், இடைப்பட்ட தூரம் 3 கீ.மீக்குள் இருக்கவேண்டும். காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, உரிய விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 28ம் தேதியாகும்.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். நேர்முக தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post 321 சமையல் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு appeared first on Dinakaran.