நாமக்கல், ஏப்.29: நாமக்கல்லில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் எஸ்ஐ சாந்தகுமார் மற்றும் போலீசார், நேற்று பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த சிலர், போலீசாரை பார்த்ததும், வந்த வழியே திரும்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த காரில் 2 கத்திகள் இருந்தது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காரில் வந்தவர்கள் பள்ளி காலனியை சேர்ந்த அஜய் பிரபாகர் (26), மாரிகங்காணி தெருவை சேர்ந்த லோகேஸ்வரன் (32), என்.கொசவம்பட்டி குணசேகரன் (48), வெள்ளவாரி தெரு கிருபாகரன் (32) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குணசேகரன் கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவியின் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கத்தியுடன் சுற்றி திரிந்து வந்தது தெரியவந்தது. கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த 4 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.