நாமக்கல், ஏப். 28: சேலம், நாமக்கல்லில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துவால் இளநீர், நுங்கு விற்பனை களை கட்டியுள்ளது. கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, சேலம், நாமக்கல்லில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில், நேற்று முன்தினம் 102.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவான நிலையில், நேற்று 101.7 டிகிரியாக பதிவானது. அதேபோல், நாமக்கல்லில் நேற்று 101 டிகிரியும், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 98.6 டிகிரியும் வெயில் பதிவானது. மதிய நேரத்தில் தகிக்கும் வெப்பத்தால், இருசக்கர வாகனங்களில் செல்லும் இளம்பெண்கள் முகத்தை துப்பட்டா, சேலையால் மூடிக்கொண்டும், கைகளில் ‘கிளவுஸ்’ மாட்டிக்கொண்டும் பயணிக்கின்றனர். வெப்பம் காரணமாக, பகல் பொழுதுகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. கொளுத்தும் வெயிலால் சேலம் மண்டலத்தில் நுங்கு, இளநீர், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு விற்பனையும் அதிகரித்துள்ளது.
The post 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில் appeared first on Dinakaran.