நாமக்கல் ஏப்.29: நாமக்கல் மாவட்டத்தில், பசுமை பரப்பை அதிகரிக்க 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் உமா பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், இயற்கையை பாதுகாக்கும் வகையில் பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், குட்டைகள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றம் காரணமாக அதிக மழைப்பொழிவு, அதிக வெப்பம் காரணமாக பல்லுயிர் பரிணாமத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. இதனை முற்றிலும் குறைக்க வேண்டும். மாசுப்பாட்டை சமன் செய்ய இயற்கை வளத்தை மேம்படுத்த அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 15 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. எனவே, வனத்துறையுடன் இணைந்து அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே காலநிலை சீராக அமையும். நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வட்டார அளவிலும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பிலும் நர்சரி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 6 அடிக்கு மேல் வளர்ந்த மரக்கன்றுகள் சாலையோரங்களில் நடப்பட்டு 3 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும். பூமியை வெப்பமடைவதில் இருந்து பாதுகாக்கும் வகையில் அதிகளவில் மரக்கன்றுகள் நடுதல், மழைநீரை சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்தல் உள்ளிட்ட செயல்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதிகளவில் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் வருங்காலத்தில் குடிக்க சுத்தமான குடிநீர் கிடைக்கும்.
சுகாதாரமான காற்றோட்டம் அமையும். இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்தார்.இக்கூட்டத்தில், அலுவலர்களுக்கு மஞ்சப்பை வழங்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் உமா வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், உதவி திட்ட அலுவலர் அன்புச்செல்வன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறை இணை பேராசிரியர் வெஸ்லி, உதவி பேராசிரியர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு appeared first on Dinakaran.