பள்ளிபாளையம், ஏப்.12: சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் தொடர் புகார்களின் விளைவாக, மாவட்ட கண்காணிப்பு குழுவினர் நேற்று பள்ளிபாளையம் பகுதியில் விதி மீறி செயல்படும் சாயச்சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிபாளையம் பகுதியில் செயல்படும் சாயச்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர், சுத்தப்படுத்தப்படாமல் இரவு நேரங்களில் சாக்கடை கால்வாய் மூலம் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. சாயச்சாலைகளில் சட்டவிரோத இயக்கத்தால், காவிரி ஆற்றில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோயில் விழாக்களுக்கு காவிரியில் இருந்து தீர்த்த நீர் எடுத்துச் செல்வது வழக்கம். தற்போது, காவிரி புனித நீருக்கு பதிலாக லாரிகளில் வழங்கப்படும் கிணற்று நீரில் தீர்த்தக்குடம் எடுத்துச் வரப்படுகிறது. கடும் வெயில் கொளுத்துவதால் காவிரி ஆறு நீரின்றி வறண்டுள்ளது.
இருந்த போதிலும் சாயச்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் அளவு மட்டும் குறைந்தபாடிலில்லை. சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் சட்ட விரோதமாக செயல்படும் சாய ஆலைகளில் இருந்து இரவு நேரங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீரால், காவிரி ஆறும், நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மாசு கட்டுப்பாடு துறையினருக்கும் சட்டவிரோத சாயச்சாலைகள் கட்டுப்படுவது இல்லை. இதனால் தொடர்ந்து சாயக்கழிவுகள் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. இதுகுறித்து நாள்தோறும் சமூக வலைதளங்களில் கழிவுநீர் தொடர்பான வீடியோ பதிவாகி வருகிறது. இதுபோன்ற தொடர் புகார்கள் காரணமாக, மாவட்ட கலெக்டர் தலைமையிலான சாயச்சாலை கண்காணிப்பு குழு நேற்று பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு நகர், அரசங்காடு, களியனூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆர்டிஓ சுகந்தி, மாசுகட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் செல்வம் மற்றும் காவல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே அறிந்ததால், சாயச்சாலைகளில் வேலை செய்த ஆட்கள் வெளியேற்றப் பட்டிருந்தனர். ஆனால் சாயமிடும் பணிகள் நடைபெற்றதை அதிகாரிகள் தெரிந்துகொண்டனர். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சாயச்சாலைகள் குறித்து தங்களின் ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மைகளை பதிவுசெய்து கொண்டனர். சட்ட விரோத சாயச்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, உரிமம் பெற்றுக்கொண்டு கழிவுநீரை சுத்தப்படுத்தும் படி அறிவுறுத்தினர்.ஆனால் தற்போது சாயமிடும் பணிகளை செய்வதில்லை எனவும், அழுக்கான சாயச்சாலைகளை தண்ணீர் விட்டு சுத்தம் செய்ததால் சாயச்சாலைகளில் ஈரம் இருப்பதாக சாயச்சாலை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் விளக்கமளித்தனர்.
The post விதி மீறி செயல்படும் சாயச்சாலைகளில் ஆய்வு appeared first on Dinakaran.