சேலம், ஏப்.11: சேலம் மாவட்டத்தில் இயற்கை பாதுகாப்பு மற்றும் சிறுதானியங்கள் பயன்பாடு குறித்து வீடுகள் தோறும் சென்று கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பெண் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க மாநாடு நரசிங்கபுரத்தில் நடந்தது. பொன்னுத்தாய் வரவேற்றார். பெண்விவசாயிகள் சங்கத்தலைவர் ஜெகதாம்பாள் மாநாட்டை வழிநடத்தினார். தமிழக ஆதிவாசி கூட்டமைப்பு ரங்கநாதன், கவிஞர் அய்யாசாமி, பெண்கள் இணைப்புகுழு மாநில தலைவர் ஷீலு, சுமதி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில், ‘‘மாநிலத்தில் 85 சதவீதம் விவசாய பணிகளில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பெண் விவசாயிகள் என்ற அங்கீகாரத்தை ஏற்படுத்தி அடையாள அட்டைகள் வழங்கவேண்டும். கூட்டு விவசாயம் செய்வதற்கு தரிசு நிலங்களை ஒதுக்கித்தரவேண்டும். பாரம்பரிய விதைகள் சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டும்,’’ என்பது உள்ளிட்ட கோரிக்ைகள் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து இயற்கையை பாதுகாப்பதற்கும், சிறுதானிய உணவை பயன்படுத்துவதற்கும் பெண்விவசாயிகள் அனைவரும் வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து சேலம் மாவட்ட பெண் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:‘ெபண் விவசாயிகளும், பூமிப்பந்தின் பாதுகாப்பும்’ என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் எங்கள் பணிகளை புதிய கோணத்தில் சிறப்பாக செய்வதற்கு முடிவு செய்துள்ளோம். இதற்கு முதலில் அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ்வதற்கு ஆதாரமான இயற்கையை பாதுகாக்க வேண்டும். அதற்கு பூமி ெவப்பமயமாதல் நிகழ்வை மட்டுப்படுத்த வேண்டும். ரசாயன உரங்கள் பயன்பாட்டையும் முடிந்தவரை குறைக்க வேண்டும். இதேபோல் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதும் மிகவும் நல்லது. முக்கியமாக தண்ணீரையும், மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு ெசய்துள்ளோம். கிராமப்புறங்களில் உள்ள எங்களது அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்கனவே உள்ளது. அதனை சீரமைத்து, மழைக்காலங்களில் நீரை சேமிக்க ஆயத்தமாகி வருகிறோம்.
இயற்கைவளம் பாதுகாக்கப்பட்டால் மண்வளம் ெபறும். அதேபோல் சிறுதானிய உணவுகளை அதிகம் உட்கொண்டால் உடல்நலம் பெறும் என்பதை நமது முன்னோர்கள் ஏற்கனவே உணர்த்திச்சென்றுள்ளனர். எனவே இதை கருத்தில் கொண்டும் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளோம். எங்கள் நிலங்களில் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் சிறுதானியங்களை பயிர்சாகுபடி செய்வதற்கும் முடிவு செய்துள்ளோம். நமது அன்றாட வாழ்வில் சுகாதாரம் மேம்பட சத்தான உணவுகளை உட்கொண்டு வருகிறோம். இதில் சிறுதானிய உணவுகளையும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு மேலும் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
இந்தவகையில் மாவட்டம் முழுவதும் இயற்கை மற்றும் சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். முடிந்தவரை எங்கள் நிலங்களில் இயற்கை தோட்டம் அமைத்து கீரைவகைகள், காய்கறிகளை பயிரிட்டு மக்களுக்கு வழங்கவுள்ளோம். மூலிகை செடிகளை வளர்ப்பதற்கும் முடிவு செய்துள்ளோம். மேலும் காய்கறிகளை பச்சையாக உண்பதிலும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதற்கான முயற்சிகளை எடுப்பதும் இன்றயை காலகட்டத்தில் அவசியமாகிறது. இதேபோல் எங்கள் பகுதிகளில் நடக்கும் கிராமசபை கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இது குறித்து கலந்துரையாட உள்ளோம்.
மொத்தத்தில் கிராமங்களின் அடிப்படை தேவைகளுக்கான அனைத்து ஆதாரங்களையும் சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என்பதை எங்களின் வருங்கால இலக்காக வைத்துள்ளோம். இவை அனைத்திற்கும் இயற்கை பாதுகாப்பு மற்றும் சிறுதானியங்கள் பயன்பாடு குறித்து வீடுதோறும் சென்று கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் பசுமை சூழ்ந்த, சுகாதாரம் நிறைந்த வளமான இயற்கை சூழலையும், உழைக்கும் மக்களின் ஆரோக்கியத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்பதே எங்களின் பெரும் இலக்காக உள்ளது.இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
The post இயற்கை பாதுகாப்பு, சிறுதானிய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.