பெரம்பலூர், ஏப். 11: நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசத் தீர்வு மையத்தை நாடி, மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணலாம்- பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பாக நடந்த விழிப்புணர்வு முகாமில் பெரம்பலூர் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிபதி சங்கர் பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பாக, பெரம்பலூர் துறையூர் சாலையில் இயங்கி வரும், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரின் கூட்ட அரங்கில் 20ம் ஆண்டு சமரசத்தீர்வு தினம் குறித்த விழிப் புணர்வு முகாம் நடை பெற்றது.
இந்த விழிப் புணர்வு முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சங்கர் தலைமை வகித்துப் பேசிய தாவது :
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி,பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்து நீதிமன்ற வளாகத்தில் நீண்டநாள் நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து தீர்வுகாண சமரசத் தீர்வு மையம் அமைக்கப் பட்டு அதில் பயிற்சி பெற்ற 20 வழக்கறிஞர்கள் மத்தியஸ்தர்களாக உள்ளனர். கல்லூரியில் படிக்கும் மாணவிகளாகிய நீங்கள், உங்கள் குடும்பத்தில், உங்கள் ஊர்களில், உங்கள் தெருக்களில், உங்கள் உறவினர்களில் யாருக்காவது நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகள் இருந்தால், அதற்கு இந்த சமரசத் தீர்வு மையத்தின் மூலம் நிரந்தரத் தீர்வுகாண முடியும்.
குறிப்பாக செக் மோசடி வழக்குகள், வங்கி பண பரிவர்த்தனை வழக்குகள், சிவில் வழக்குகள், உரிமையியல் வழக்குகளுக்கும், கவுன்சிலிங் மையத்தில் ஆலோசனை பெற்ற பிறகு, குடும்ப வழக்குகளுக்கும் இந்த சமரசத் தீர்வு மையத்தின் மூலம் நிரந்தர தீர்வு காணமுடியும். சமரசத் தீர்வு மையத்தில் தீர்வு கண்ட பிறகு, அது தொடர்பாக யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது. பட்டம் பயிலும் மாணவிகள் சட்டம் குறித்தும் விழுப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். வழக்குகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவையும் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், பெரம்பலூர் சார்பு நீதிபதியுமான மகேந்திர வர்மா, நீதிமன்ற மத்தியஸ்தர்கள் ராதா கிருஷ்ணமூர்த்தி, குமார சாமி, துரை பெரியசாமி மற்றும் பேரா.முருகையன், கல்லூரி வழக்கறிஞர் பாபு, பெரம்பலூர் வழக் கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சேகர் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மகளிர் மற்றும் நர்சிங் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் முதல்வர் உமாதேவி பொங்கியா வரவேற்று பேசினார். முடிவில் தனலட்சுமி சீனிவாசன் காலேஜ்ஆப் நர்சிங் கல் லூரி முதல்வர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார்.
The post நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச மையத்தை நாடி தீர்வு காணலாம்; விழிப்புணர்வு முகாமில் தலைமை குற்றவியல் நீதிபதி சங்கர் தகவல் appeared first on Dinakaran.