புவனகிரி, ஏப். 11: புதுச்சத்திரம் அருகே தனியார் பஸ்மீது மோதிய அரசு விரைவு பஸ் வயலில் இறங்கி நின்றது. இதில் 18 பயணிகள் படுகாயம் அடைந்தனர். கடலூரில் இருந்து குள்ளஞ்சாவடிக்கு நேற்று காலை பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. கடலூர் அருகே ஆலப்பாக்கம் வந்தபோது, ரயில்வே மேம்பால பகுதியில் இருந்து சர்வீஸ் சாலைக்கு செல்ல டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார்.
அப்போது கடலூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து தனியார் பேருந்து மீது பக்கவாட்டில் பயங்கரமாக மோதி, சாலை ஓர வயல் பகுதியில் இருந்த பள்ளத்தில் அரசு விரைவு பேருந்து இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் 2 பஸ்களிலும் பயணம் செய்த புவனகிரி அருகே சாக்காங்குடியை சேர்ந்த உதயகுமார்(35), பூண்டியாங்குப்பத்தை சேர்ந்த அமிர்தவள்ளி(60), தமிழரசி(65), அலமேலு(65), வீரகுமார்(32), கடலூரை சேர்ந்த வாசுகி(49), திருக்குவளையை சேர்ந்த லெனின்(49) மேல்மலையனூரை சேர்ந்த பச்சையப்பன்(52), உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுச்சத்திரம் அருகே பரபரப்பு: தனியார் பஸ் மீது மோதி வயலில் இறங்கிய அரசு விரைவு பஸ் appeared first on Dinakaran.