குமாரபாளையம்,ஏப்.10: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பெரியார் நகர் குப்புசாமி லைன் பகுதியில் வசிப்பவர் விசைத்தறி தொழிலாளி செல்வம். முன்விரோதம் காரணமாக இவரை, சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சுருட்டையன் (எ) சிவா, குமாரபாளையம் ஹைஸ் கூல் ரோட்டை சேர்ந்த பாவா (எ) ராஜா ஆகியோர் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக செல்வத்தின் மனைவி யுவராணி கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார், கடந்த 2002ல் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து, திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணையின் போது ஜாமீனில் வெளியே வந்த இருவரும், மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
போலீசார் தேடியும் தலைமறைவான இருவரும் இருக்கும் இடம் தெரியவில்லை. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தலைமறைவு குற்றவாளிகள் இருவரையும் பிடித்து, வரும் ஜூன் 3ம்தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர் படுத்தும்படி குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாகியுள்ளனர். குற்றவாளிகள் நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
The post ஜாமீனில் வந்து தலைமறைவான கொலை குற்றவாளிகள் 2 பேருக்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.