பள்ளிபாளையம், ஏப்.10: மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் பாசனத்திற்கு, தடையின்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் சுமார் 30 ஆயிரம் டன் நெல் விளைந்துள்ளது. தமிழக அரசு உரிய நேரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுத்ததால், இடைத்தரகர்களின் விலை சூதாட்டம் தவிர்க்கப்பட்டு, நெல்லுக்கு நியாயமான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரத்தில், மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரைக் கொண்டு, இந்த ஆண்டு 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். வெள்ளை பொன்னி, பிபிடி, ஐஆர்-20 மற்றும் ஏடிபி உள்ளிட்ட நெல் ரகங்களை நடவு செய்தனர்.
விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து போதுமான நீர் திறக்கப்பட்டது. இந்தாண்டு நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. புதிய ரகமான ஏடிபி ரகத்தில் குலை நோய், அசுவினி, போன்ற நோய்களின் பாதிப்பு ஏதும் இல்லை. இதனால், பள்ளிபாளையம் வட்டாரத்தில், சுமார் 30 ஆயிரம் டன் நெல் விளைந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு லாபமும், கால்நடைகளுக்கு போதிய தீவனமும் கிடைத்துள்ளது.
நெல் விவசாயிகளை இடைத்தரகர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, இந்த ஆண்டு களியனூர், இலந்தகுட்டை ஆகிய 2 இடங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டது. அறுவடைக்கு முன்பாகவே நெல்லுக்கான ஆதார விலையை அரசு அறிவித்தது. இதன்படி ஒரு கிலோ சன்ன ரக நெல்லுக்கு 24.50 ரூபாயும், குண்டு ரகத்துக்கு 24.05 ரூபாயும் அரசு அறிவித்தது. உரிய காலத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதாலும், நெல்லுக்கான ஆதார விலையை அரசு அறிவித்ததாலும், விவசாயிகளுக்கு வியாபாரிகளால் நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை. அரசின் ஆதார விலைக்கு, நெல் கொள்முதல் நிலையத்தில் உத்தரவாதம் இருந்ததால், வியாபாரிகள் பலர் ஆதார விலையை விட கூடுதல் விலைக்கு நெல்லை கொள்முதல் செய்தனர்.
விவசாயிகளின் வயல்களுக்கே நேரடியாக சென்று, வியாபாரிகள் வாங்கிய போதும், நெல் கொள்முதல் நிலையத்தினால் தான், தங்களுக்கு உரிய விலை கிடைத்துள்ளது என்பதை உணர்ந்த விவசாயிகள் பலர், விளைந்த நெல்லின் ஒரு பகுதியை, அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நேரடியாக விற்பனை செய்தனர். இதனால் இந்த ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 246 விவசாயிகளிடம் இருந்து 1,185 டன் நெல்லை வாங்கியுள்ளது. நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையம் கொண்டு செல்வது, இறக்குவது, நெல்லில் ஈரத்தன்மை, பதர் போன்ற பல பிரச்னைகள் இருந்த போதிலும், கொள்முதல் நிலையத்தின் மூலம் அரசின் விலை உத்தரவாதம் இருப்பதால், வியாபாரிகளிடம் விற்ற நிலையிலும், அரசு கொள்முதல் நிலையத்திற்கும் விவசாயிகள் விற்றுள்ளனர். கொள்முதல் நிலையம் இருந்ததால் தான், வியாபாரிகளின் விலை குறைப்பில் இருந்து விடுபட முடிந்ததென விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The post கால்வாய் பாசன பகுதியில் 30,000 டன் நெல் விளைச்சல்: அரசு நேரடி கொள்முதல் நிலையத்தால் உரிய விலை appeared first on Dinakaran.