நாமக்கல், ஏப்.10: கோடை காலத்தையொட்டி, நாமக்கல் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதியை ஏற்படுத்தவேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு வாரங்களுக்கு முன், தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் வீசியது. கடந்த வாரத்தின் இறுதியில், 2 நாட்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக வெயில் அதிகரித்துள்ளது. காலை 11 மணிக்கு மேல் வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். கோடை காலத்தில், வெப்ப தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் உமா கேட்டுகொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
வெயில் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல நேர்ந்தால், தொப்பி அணிந்து அல்லது குடை பிடித்து செல்லவேண்டும். வெளிர்ந்த நிறமுடைய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயில் நேரங்களில் வெளியில் செல்லும் போது, தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். தாகம் எடுக்கா விட்டாலும் கூட, அடிக்கடி தண்ணீர், இளநீர், மோர் போன்ற பானங்களை அருந்த வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி பழங்கள் மற்றும் வெள்ளரி போன்றவற்றை உட்கொள்ளலாம். எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில் காற்றோட்டம் நிறைந்த மற்றும் குளிர்ச்சியான இடங்களில் இருக்க வேண்டும்.
வீட்டின் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். மின்விசிறி அல்லது ஏர் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும். வெயில் நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களை திரைச்சீலைகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் நிழலான இடங்களில் வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் இடங்களில், தற்காலிக கூடாரங்களை உருவாக்குவதன் மூலம் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். கடினமான மற்றும் திறந்தவெளியில் செய்யும் வேலைகளை, வெயில் குறைவாக உள்ள காலை மற்றும் மாலை வேளைகளில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கடினமான வேலைகளை செய்பவர்கள், அடிக்கடி ஓய்வு எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற் சாலைகள் மற்றும் அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும், பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். தலைவலி, மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். காலை 11 மணி முதல், மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை மக்கள் போதுமானவரை தவிர்க்க வேண்டும். தேநீர், காபி, மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். வெயில் நேரங்களில் திறந்த வெளியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றி, கோடை காலத்தில் வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
The post கோடை காலத்தையொட்டி மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி : உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.