நெய்வேலி, ஏப். 10: நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் தகாத உறவால் இளம்பெண்ணை கட்டையால் அடித்துக் கொலை செய்து சுரங்க பள்ளத்தில் சடலத்தை வீசிய தொழிலாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், நெய்வேலி, மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு வெள்ளூர் ஊராட்சி 2வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி பிரபாவதி (33). பாஸ்கர் ஒரு வருடத்துக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபாவதி கடந்த 7ம் தேதி தனது தாயிடம் நெய்வேலிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பிரபாவதியின் தாயார் தனலட்சுமி தனது மகளுக்கு போன் செய்துள்ளார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி கடந்த 8ம் தேதி இதுகுறித்து மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரபாவதிக்கு அவரது பள்ளிப்பருவ நண்பரான வடக்கு வெள்ளூர் ஊராட்சியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சம்பத் (33) என்பவருடன் சமீபகாலமாக பழக்கம் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் தொழிலாளியான சம்பத்தை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 7ம்தேதி பிரபாவதியை சம்பத் தனது இருசக்கர வாகனத்தில் நெய்வேலிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இரவு 7 மணியளவில் வடக்கு வெள்ளூர் அருந்ததியர் காலனி அருகே வந்து கொண்டிருந்தபோது அவருக்கும், பிரபாவதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சம்பத் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே கிடந்த கட்டையால் பிரபாவதியின் தலையில் ஓங்கி அடித்தாராம். இதில் பிரபாவதி அங்கேயே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த பகீர் தகவல் அம்பலமானது. இந்த சம்பவம் நடந்தபோது அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் உடனடியாக பிரபாவதியின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று என்எல்சி 2ம் சுரங்க பகுதியில் உள்ள மண்மேட்டில் இருந்து பள்ளத்தில் தள்ளிவிட்டு சென்றதாக போலீசாரிடம் சம்பத் தெரிவித்தார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் மந்தாரக்குப்பம் போலீசார், உடல் அழுகிய நிலையில் கிடந்த பிரபாவதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
இச்சம்பவம் குறித்து தனலட்சுமி அளித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தந்தையை தொடர்ந்து தாயும் இறந்ததால் கதறி அழுத 2 குழந்தைகளும் பாட்டி தனலட்சுமியின் பராமரிப்பில் தற்போது உள்ளனர். கைதான சம்பத்துக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளதும், தற்காலிகமாக மனைவியை பிரிந்து வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது. தகாத உறவால் இளம்பெண்ணை வாலிபர் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் தகாத உறவால் பயங்கரம்: இளம்பெண்ணை அடித்துக் கொன்று சுரங்க பள்ளத்தில் சடலம் வீச்சு: தொழிலாளி அதிரடி கைது appeared first on Dinakaran.