பலாத்கார புகாரை விசாரிக்காமல் அலட்சியம்; இன்ஸ்பெக்டருக்கு ஓபன் மைக்கில் டோஸ் விட்ட திருச்சி டிஐஜி: பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்

அரியலூர்: அரியலூர் மகளிர் போலீசில் பெண் ஒருவர் பலாத்கார புகாரளித்தார். பெண் சிறப்பு எஸ்ஐ அழைத்த நாளில்,விசாரணைக்குவர இயலாததால், போன் செய்து விசாரணைக்கு வரலாமா எனக் கேட்ட பெண்ணை எஸ்ஐ தரக்குறைவாக திட்டி தீர்த்தார். இந்த ஆடியோ திருச்சி டிஐஜி கவனத்துக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட மைக்கில் தொடர்பு கொண்ட டிஐஜி வருண்குமார், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமியிடம், பெண் சிறப்பு எஸ்ஐ சுமதி குறித்து விசாரித்தார். பின்னர், புகாரளித்த பெண்ணிடம் எஸ்ஐ பேசிய ஆடியோவை மைக்கில் ஒலி பரப்பிய டிஐஜி, ‘‘பெண் எஸ்ஐயை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, ‘‘எஸ்பி ஆபிசுக்கு கேட்டுச்சா’’ என்ற டிஐஜியிடம், ‘‘பொதுமக்களிடம் அவர் அஜாக்கிரதையாக பேசுறாங்கய்யா’’ என எஸ்பி ஆபிஸ் போலீசார் பதிலளித்தனர். ‘‘பெண் எஸ்ஐ அயோக்கியத்தனமா பேசுறாங்க. இன்ஸ்பெக்டர் இந்த பாஷைலதான் பெண்களிடம் பேசுவீங்களா?’’ என்று டிஐஜி கேள்வி கேட்டதற்கு, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, ‘‘தெரியாமல் பேசி இருப்பார். நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று பதிலளித்தார்.

கோபமடைந்த டிஐஜி, ‘‘வெட்கமாக இல்ல. இன்ஸ்பெக்டர் என்று சொல்லி கொள்வதற்கு. அவர் தெரியாமல் பேசி இருப்பார்கள் என்று கூறும் நீங்கள் தான் முதல் குற்றவாளி. அந்தம்மா பேசியது தப்புன்னு உங்களால் சொல்ல முடியவில்லை. என்ன ஆய்வாளர் நீங்க?உடனே அந்த அம்மாவை(எஸ்ஐ) என்ன டியூட்டில நின்னாலும் இங்க துரத்தி விடுங்க. இந்த மாதிரி காவல்துறையில அத்துமீறல் பேச்சு இருந்துச்சுன்னா, மாவட்டம் முழுவதும் கேட்கிற மாதிரி மைக்கிலேயே ஆடியோ போடப்படும்’’ என்று எச்சரித்து மைக்கை கட் செய்தார்.

The post பலாத்கார புகாரை விசாரிக்காமல் அலட்சியம்; இன்ஸ்பெக்டருக்கு ஓபன் மைக்கில் டோஸ் விட்ட திருச்சி டிஐஜி: பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர் appeared first on Dinakaran.

Related Stories: