சென்னை: போலி சாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்திற்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக் கோரி பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, சாதி சான்றிதழ்களின் உண்மைதன்மை குறித்த விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு வகுத்துள்ள விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும். இந்த குழுக்கள் விதிகளின்படி விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். முழுமையான விசாரணைக்கு பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக 6 வாரங்களில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post முழுமையான விசாரணைக்கு பின்னரே சாதிச்சான்று வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.