காதலிப்பதாக திருமணத்தை நிறுத்தி மணமேடையில் தாலியை பிடுங்கி வீசிய மணப்பெண்: உறவினர்கள் தர்மஅடி

பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். பத்தாம் வகுப்பு முடித்துள்ள இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததும், அவசரஅவசரமாக உறவினரது மகனுக்கு அவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி, நேற்று காலை இளம்பெண்ணும், உறவினர் மகனுக்கும் பள்ளிகொண்டா அருகே உள்ள கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கவிருந்தது.

காலை 7.30- 9.00 மணி முகூர்த்த நேரத்தில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. பின்னர், மணமேடையில் மணமகனிடம் தாலி எடுத்து கொடுக்கப்பட்டது. அவர் தாலியை கட்ட முற்பட்டபோது மணமகள் திடீரென தாலியை பிடுங்கி வீசி எறிந்தார். இதனால் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணப்பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கினர்.

இதனால் கோயில் வளாகம் முழுவதுமே களேபரமாகியது. தகவலறிந்து பள்ளிகொண்டா போலீசார் வந்து இளம்பெண்ணை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பெண்கள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண், உறவினர் வீட்டிற்கு செல்வதாகவும், சிறிது காலம் கழித்து தனது வாழ்க்கை துணையை தானே தீர்மானித்து கொள்வதாகவும் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.

The post காதலிப்பதாக திருமணத்தை நிறுத்தி மணமேடையில் தாலியை பிடுங்கி வீசிய மணப்பெண்: உறவினர்கள் தர்மஅடி appeared first on Dinakaran.

Related Stories: