அதிகாரப்பூர்வ பதிவுகளுடன் ஒப்பிடப்பட வேண்டும் முந்தைய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை முறையாக சரிபார்த்த பிறகே பத்திரப்பதிவு: பதிவுத்துறை உத்தரவு

சென்னை: பதிவுத்துறை வெளியிட்ட சுற்றறிக்கை: சொத்து விற்பனை தொடர்பான பத்திரம் பதியும்போது, முந்தைய அசல் ஆவணம், அதாவது மூலப்பத்திரம் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு சட்டத்தில் 55A என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்புதிய பிரிவை பயன்படுத்த தடை விதித்தது. பதிவு சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆவணப்பதிவின் போது செய்ய வேண்டியவை குறித்து மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, முந்தைய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை முறையாக சரிபார்த்த பின்னரே ஆவணத்தை பதிவு செய்யலாம்.

இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பதிவு அலுவலர்கள் நிவர்த்தி செய்த பிறகு பதிவு செய்யலாம். ஒரு பத்திரம் பதிவுக்காக சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யப்படும் போது, அதற்கு, 10 நாட்களுக்கு முன் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழ், அந்த சொத்துக்கான மூலப்பத்திரமான அசல் ஆவணம் போன்றவற்றை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்று, முந்தைய அசல் ஆவணம் இல்லாத நிலையில், அந்த பத்திரத்தை பதிவு செய்யக்கூடாது. அந்த சொத்து அடமானம் வைக்கப்பட்டு இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து, தடையில்லா சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post அதிகாரப்பூர்வ பதிவுகளுடன் ஒப்பிடப்பட வேண்டும் முந்தைய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை முறையாக சரிபார்த்த பிறகே பத்திரப்பதிவு: பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: