உயர்கல்வித்துறை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று மாலை பாராட்டு விழா

சென்னை: பல்கலைக்கழகங்களின் மசோதாக்களுக்கு சட்ட ரீதியாக ஒப்புதல் பெற்று தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, உயர்கல்வித் துறை சார்பில் இன்று மாலை பாராட்டு விழா நடக்கிறது. பல்கலைக்கழகங்களின் மசோதாக்களுக்கு சட்ட ரீதியாக போராடி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெற்று கொடுத்ததற்காக, தமிழக உயர்கல்வித் துறை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வருகிற மே 3ம் தேதி (இன்று) பாராட்டு விழா நடத்தப்படும் என கடந்த 25ம் தேதி பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக, பேரவையில் பேசிய அமைச்சர், \\”உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத்தந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை பெற்று தந்துள்ள முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என பல்கலைக்கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், கல்லூரியின் கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

அதற்கு முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார். அதன்படி, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீட்டெடுத்து மாநில சுயாட்சியை உறுதிப்படுத்திய முதல்வருக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3ம் தேதி (இன்று) மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும்\\” என்று தெரிவித்தார். அதன்படி, இன்று மாலை மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு எனும் பெயரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. பல்கலைக்கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் என அனைவரும் இணைந்து விழாவை நடத்த உள்ளனர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில், அமைச்சர் கோவி.செழியன், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் முனிரத்தினம் உள்ளிட்டோர் விழாவில் உரையாற்ற உள்ளனர்.

 

The post உயர்கல்வித்துறை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று மாலை பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: