பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன், அமைச்சர்கள் இடையே காரசார விவாதம்

பேரவையில் நேற்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பாஜ) பேசியதாவது: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சித் திறனை அதிகரிக்க தமிழக அரசு அதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு இணைப்பு பாலம் உருவாக்க வேண்டும்.

* அமைச்சர் சி.வி.கணேசன்: இதற்காக தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது தான் நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தால் ஏராளமான மாணவர் பயன்பெற்று வருகின்றனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை பெற்றுள்ளனர்.

* சபாநாயகர் அப்பாவு: வேலைவாய்ப்பு வழங்குவோருக்கும், வேலை தேடுவோருக்கும் இணைப்பு பாலம் கேட்டீர்கள். நான் முதல்வன் தான் அந்த இணைப்பு பாலம்.

* வானதி சீனிவாசன்: அந்த இணைப்பு பாலம் வலுவாக இருக்க வேண்டும். அதை நான் குறைத்து மதிப்பிடவில்லை.

* அமைச்சர் சிவசங்கர்: இந்த இணைப்பு பாலம் சமீபத்திலே பாம்பனுக்கு கட்டப்பட்ட பாலம் போல் அல்லாமல் இந்த திராவிட மாடல் பாலம். தரமாகவும், உறுதியாகவும் இருக்கும்.

* வானதி சீனிவாசன்: பாம்பன் பாலம் இந்திய தொழில் நுட்பத்தில், நம்முடைய இந்திய பொறியாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. இதை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

* அமைச்சர் சிவசங்கர்: அவைக்குள் ஒன்று சொல்வதும், உங்கள் கட்சித்தலைவர்கள் வெளியே பேசுவதும் வெவ்வேறாக உள்ளது. ஏதோ தமிழகம் பின் தங்கியிருப்பதை போலவும், தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வங்களை போல பேசுகிறார்கள். எனவே, நீங்களும் தமிழ்நாட்டை குறைத்து பேச வேண்டாம். நாங்களும் உங்களை குறைத்துப் பேசவில்லை.

* வானதி சீனிவாசன்: நாங்கள் எங்கேயும் தமிழகத்தை குறைத்து மதிப்பிடவில்லை. பெருமைப்படுகிறோம். பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்க மாநில அரசு சீரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். கோவை தொகுதிக்கு பல அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டார். மகிழ்ச்சி. ஆனால் செயல்பாட்டிற்கு அவற்றை கொண்டு வர வேண்டும்.

* அமைச்சர் எ.வ. வேலு: கோவை மாவட்டத்திற்கு எந்தப் பணியும் நடைபெறாத மாதிரி உறுப்பினர் பேசுகிறார். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புறவழிச் சாலை, அவிநாசியிலிருந்து நீலகிரிக்கு நேரடியாக போவதற்கு மேட்டுப் பாளையத்தில் 4 வழிசாலை அமைக்கப்பட்டு வருகிறது.

The post பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன், அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: