சென்னை: தமிழ்நாடு அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவுத் திட்டத்திற்கும் இடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் காலநிலை மீள்திறன் திட்டச் செயலாக்கத்திற்கான புரிந்துணர்வுக் கடிதம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவுத் திட்டம், இந்தியாவுடன் மீள்திறனுக்கான தகவமைப்பு (Adaptation for Resilience (ADAPT4R) எனப்படும் திட்டத்தின் செயலாக்கத்திற்கான புரிந்துணர்வுக் கடிதம் கையெழுத்தானது. இப்புரிந்துணர்வுக் கடிதம் தமிழ்நாடு அரசின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுப்ரியா சாஹு, மற்றும் நொசோமி ஹாஷிமோட்டோ, துணை இயக்குநர், உலக உணவுத் திட்டம் அவர்களிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.
தகவமைப்பு நிதியின் ஆதரவுடன் செயல்படுத்தப்படவிருக்கின்ற மீள்திறனுக்கான தகவமைப்பு எனப்படும் இத்திட்டம், தமிழ்நாடு, ஒடிஷா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் பெரிதும் பாதிப்படையக் கூடிய நிலையில் உள்ள, வேளாண் சமூகங்களிடையே, மீள்திறனை வலுப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைவுடன் ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் காலநிலை மீள்திறன்மிகு வேளாண் நடைமுறைகளை முன்னிறுத்துவதன் மூலமும், தகவல்கள் மற்றும் வளங்களை எளிதில் கிடைக்கச் செய்வதன் மூலமும், சமூக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும், பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலமும் சிறு விவசாயிகள், குறிப்பாக பெண்விவசாயிகளின் தகவமைப்புத் திறன் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான தீர்வுகளை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இயற்கைப் பேரிடர்களாலும் மாறிவரும் காலநிலை அமைப்புகளாலும் விவசாயம் அதிகளவில் பாதிக்கப்படைவதற்கான அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களில் கால நிலை அபாயங்களைக் குறைக்கவும், உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்ய மற்றும் வாழ்வாதரங்களைப் பாதுகாக்கவும் 1.4 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2024-ல் இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் உலக உணவுத் திட்டத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற இப்புரிந்துணர்வுக் கடிதப் பரிமாற்றமானது காலநிலைத் தகவமைப்பிற்கான தேசிய இலக்குகள் மாநில அளவில் செயல்படுத்தப்படுவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பாகத் திகழும்.
இந்நிகழ்வின்போது அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுப்ரியா சாஹு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் இயக்குநர் ஆ.ர.ராகுல் நாத், அரசு சிறப்புச் செயலாளர் (சுற்றுச்சூழல்), அனுராக் மிஷ்ரா, அரசு சிறப்புச் செயலாளர் (வனம்), ரிட்டோ சிரியாக், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காலநிலை மாற்றத் தலைவர், மீள்திறன்மிகு உணவு அமைப்புகள் பிரதன்யா பைத்தன்கர், துணை இயக்குநர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன அமைச்சகம், சுதானுகா சர்க்கார், உட்பட உலக உணவுத் திட்டம் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகப் பிரதிநிதிகள், ஆகியோர் உடனிருந்தனர்.
The post ராமநாதபுரத்தில் காலநிலை மீள்திறன் திட்டச் செயலாக்கத்திற்கு புரிந்துணர்வு கடிதம் கையெழுத்தானது appeared first on Dinakaran.