சேலம், ஏப்.9: சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக புதிதாக வண்ண மீன்கள் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் மக்கள் பார்வைக்கு கொண்டு வர வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏற்காடு மலை அடிவாரத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இப்பூங்காவில் புள்ளிமான், கடமான், முதலை, மலைப்பாம்பு, குரங்கு, முயல், வண்ணப்பறவைகள், வெள்ளை மயில் உள்ளிட்ட 200க்கும் அதிகமான வன உயிரினங்களை பராமரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும், ஏற்காட்டிற்கு வரும் வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் பூங்காவிற்கு வந்திருந்து விலங்குகளை பார்த்து மகிழ்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும்நிலையில், அவர்களை கவருவதற்காக பல்வேறு புதிய நடவடிக்கைகளை வனத்துறை எடுத்து வருகிறது. இதற்காக பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு தனிப்பகுதியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், பூங்கா வளாகம் முழுவதும் ஆங்காங்கே விலங்குகள் உருவத்திலான சேர்கள் அமைத்துள்ளனர். 3டி செல்பி பாயிண்டுகள் மற்றும் குடிநீர், கழிவறை வசதிகளையும் சுற்றுலா பயணிகளுக்காக ஏற்படுத்தியுள்ளனர். இதுபோக புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பெரிய விலங்குகளை குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்க விரிவான திட்டத்தை தயாரித்து, அதற்கான ஏற்பாடுகளையும் வனத்துறை செய்து வருகிறது. மிக விரைவில் அதற்கான அனுமதி அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்று, பெரிய விலங்குகளை கொண்டு வந்து பராமரிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது, குரும்பப்பட்டி பூங்காவில் மயில்களுக்கான கூண்டு அருகில் புதிதாக வண்ண மீன்கள் காட்சியகம் ரூ.17 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வண்ண மீன்கள் காட்சியகத்திற்கான கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டனர். அதனுள் 6 தொட்டிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண மீன்களை பார்வைக்காக வைக்க இருக்கின்றனர். மேலும், மீன்கள் குறித்த அறிய தகவல்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவிடும் வகையிலான தகவல்களை அந்த காட்சியகத்தில் காட்சிப்படுத்த வனத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த வண்ண மீன்கள் காட்சியகம் மிக விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
அதேபோல், புதிய செல்பி பாயிண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 3டி ஓவியமாக புலியின் உருவம் தாங்கியிருக்கும் அந்த சுவரின் முன்பு சுற்றுலா பயணிகள் நின்று, செல்போன்களில் படங்களை எடுத்து மகிழ்கின்றனர். இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘குரும்பப்பட்டி பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிதாக வண்ண மீன்கள் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அதனுள் வண்ண மீன் தொட்டிகளை வைத்து, மக்கள் பார்வையிட அனுமதிக்க இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்,’’ என்றனர்.
The post சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வண்ண மீன்கள் காட்சியகம் அமைப்பு appeared first on Dinakaran.