சேலம், ஏப். 24: சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் தெற்கு புதூரைச் சேர்ந்தவர் செல்வம் (38). விவசாயியான இவரது மகன் யுவராசு (16). இவர் அங்குள்ள அரசு ஆண்கள் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். தற்போது பொதுத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், சூரைக்காட்டில் உள்ள விவசாய தோட்டத்தில், தந்தைக்கு உதவியாக இருந்து வந்தான். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு யுவராசு செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். இதைக்கண்ட தந்தை செல்வம், சாப்பிடக்கூட செல்லாமல், கேம் விளையாடி கொண்டிருந்ததை கண்டித்துள்ளார். சற்றுநேரத்தில் யுவராசு திடீரென வாந்தி எடுத்தான். இதுகுறித்து செல்வம் கேட்டபோது, தோட்டத்தில் அடிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை எடுத்து சாப்பிட்டதாக தெரிவித்தான். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம், மகனை மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பெற்று வந்த யுவராசு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
The post பிளஸ் 1 மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.