நீர் நிலைகளில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்

 

ஈரோடு, ஏப். 9: ஈரோடு அருகே உள்ள திண்டல் ரிங்ரோடு பகுதியில் இருந்து, முத்தம்பாளையம்-வள்ளிபுரத்தான்பாளையம் இணைப்புச்சாலையை இணைக்கும் வகையில் உள்ளது கருங்கோணம்பாளையம் பிரிவுச்சாலை. இந்த சாலையையொட்டி கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் ஓடையான பெரும்பள்ளம் ஓடை கால்வாய் உள்ளது. இந்த ஓடையில் கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் மட்டுமின்றி இதர கிளை வாய்க்கால்கள் மூலமாக மழை நீர் வழித்தடங்களும் உள்ளன.

அவை பெரும்பள்ளம் ஓடையில் கலந்து இப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீராதாராமாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையில், திண்டல் ரிங்ரோட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில், கருங்கோணம்பாளையம் பிரிவு சாலையில், பெரும்பள்ளம் ஓடையின் கரையில், கட்டிடம் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை கொட்டியுள்ளனர்.

இதனால், அப்பகுதியில் நீர்நிலை மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருவதால் காற்று மாசுபாடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, நீர் நிலைகளில் மாசுபாடு ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் சாலையோரம் தொழிற்சாலை மற்றும் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நீர் நிலைகளில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள் appeared first on Dinakaran.

Related Stories: